சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்திற்கு 14 நாள் நீதி மன்ற காவல்... சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உத்தரவு.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா செய்தி தொடர்பாளர், எம்.பி சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா செய்தி தொடர்பாளர், எம்.பி சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டே என சிவசேனா கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இது ஏற்கனவே அக்கட்சி தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சிக்கு மத்தியில்தான் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்குதலுக்கு நெருக்கமான அக்காட்சியின் எம்பி சஞ்சய் ராவத் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் மீது புகார். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான பிரவீன் ராவத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது, மேலும் கடந்த ஜூன் மாதம் இந்த நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, ஆனால் ராவத் சம்மனை ஏற்க மறுத்தார். பின்னர் விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டது, ஆனால் அப்போது கைது செய்யப்படவில்லை, பின்னர் ஜூலை 31ஆம் தேதி மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவருக்கு சொந்தமான 9 இடங்களில் பல மணி நேரம் சோதனை நீடித்தது.
அதன்பின்னர் உளவுத்துறை அதிகாரிகள் ராவத்திடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் சிவசேனாவின் இருந்து வெளியேற மாட்டேன் என்றும், பாஜகவின் இந்த நெருக்கடிக்கு அடிபணிய மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இந்த ஊழலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார். இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவர் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான நீதிமன்ற நீதிபதி எம்ஜி தேஷ்பாண்டே முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை, இதனால் நீதிபதி சஞ்சய் ராவத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கு வீட்டு உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது, சிறைத் துறையின் வழிகாட்டுதலின்படி அவருக்கு அதிகாரிகள் தேவையான படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.