புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சை கேட்டு தந்தையே மகளை நரபலி கொடுத்த அதிர்ச்சிகர கொடுமை சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, நொடியூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் வித்யா (13) வயது,  இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி வீடு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து  உறவினர்கள் பல்வேறு  பகுதிகளில் தேடியும் சிறுமியை காணவில்லை, அப்போது அருகில் உள்ள தைலமரக் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் வித்யா காயங்களுடன் கிடந்தார், இதனை தொடர்ந்து உறவினர்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால்  சிகிச்சை பலனின்றி அன்று இரவே சிறுமி உயிரிழந்தார். தைலக்காட்டில் வித்யாவின் உடைகள் கிழிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. 

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி  ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியானது, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து மாதர் சங்கம் வலியுறுத்தி வந்தன, இந்நிலையில் சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, பன்னீர்செல்வம் முன்னுக்குப்பின் முரணாக  பதில் அளிக்கவே அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அப்போது தனக்கு அதிக பணமும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால் மகளை நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு மந்திரவாதி கூறியதாகவும் அதனாலேயே மகளை நரபலி கொடுத்ததாகவும் பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார், இதைக் கேட்ட போலீசாருக்கு தூக்கி வாரிபோட்டது. 

தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் விசாரணை நடத்தியதில்,  நானும் எனது உறவினர் குமாரும் சேர்ந்து  வித்தியா அதிகாலையில் தண்ணீர் எடுக்க சென்றபோது அவரை கழுத்து நெரித்து கொலை செய்தோம் என ஒப்புக்  கொண்டார், இதையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகிய இருவரையும் கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்தனர். இது குறித்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளரிடம் பேசிய போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது, ஆனால்  புலன் விசாரணையில் அவரது தந்தை உள்ளிட்டோராலேயே  சிறுமி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மகளை கொன்றால் நிறைய பணம் கிடைக்கும் பொருள் சேரும் எனக்கூறி கொலை தூண்டிய மற்றும் பூஜை நடத்திய பெண் மந்திரவாதி உள்ளிட்டோர்  விரைவில் கைது செய்யப்படுவர் என அவர் தெரிவித்தார். தந்தையே மகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.