தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது பாப்பி ரெட்டிபட்டி, கடலூர், திருவள்ளூர் ஆகிய ஊர்களில் வாக்குப் பதிவில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். 

இந்நிலையில் மதுரை, தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் வாக்குபதிவில் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவின் போது மாதிரி வாக்கு பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவை மேற்கொண்டது, வாக்குப்பதிவில் சில இடங்களில் எந்திர குறைபாடுகள் ஏற்பட்டது என புகார்கள் எழுந்துள்ளன என்றார்.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப் பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் பேரில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

இதை கருத்தில் கொண்டே தேனி, ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் அனுப்பப் பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்த மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்பதால், விவிபேட் இயந்திரங்கள் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேனிக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது 
தொடர்பாக திமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படுமென்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

இதனிடையே தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தருமபுரி தொகுதியில் 8, திருவள்ளுர் தொகுதியில் 1, கடலூர் தொகுதியில் 1, தேனி தொகுதியில் 2 மற்றும் ஈரோடு தொகுதியில் 1 என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில்  வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.