12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் கடந்த கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பீதியிலும் மே மாதம் இறுதியில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று ஜூன் 10-ம்  தேதியுடன் அனைத்து மையங்களிலும் நிறைவடைந்தது. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- 12ம் வகுப்பு தேர்வை 35,000 மாணவர்கள் எழுதவில்லை. ஆனால், தேர்வு எழுத இதுவரை 718 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்து இயங்கினால் மட்டுமே தேர்வு நடத்த முடியும்.

மேலும், முதல்வருடன் ஆலோசித்த பிறகே 12ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றார்.  கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க நீண்ட நாட்கள் ஆகும். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.