120 crores documets captured in raid

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கிறது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனால், அனைத்து பகுதியிலும், வேட்பாளர்கள் சூறாவளியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரச்சாரத்தின்போது, அதிமுக சசிகலா அணி வேட்பாளா டி.டி.வி.தினகரன் , வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து தொகுதியில் தங்க வைத்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில், பணம் பட்டுவாடா செய்ததாக இதுவரை ரூ.50 லட்சம் பறிமுதல் செய்தனர். 40க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அனைத்தும் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதி மட்டுமின்றி சென்னை நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் சிலரை தங்க வைத்து, அங்கு பணம் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையொட்டி, சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது, ஒரு விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதனுடன், ஆர்கே நகரில் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதராங்கள் சிக்கயதாக கூறப்படுகிறது. மேலும், இடைத் தேர்தலுக்கு முன், ரூ.120 கோடி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.