ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு  நம்பிக்கை வாக்கு கோரியபோது ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரின் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு திமுக சென்றது.

நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திம் முடிவெடுத்து ஒரு மாதத்துக்குள் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றது திமுக. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சபாநாயகர் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது. என மனுவில் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் வழக்கை சுட்டிகாட்டி 11 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய  தடை விதிக்க வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை கடந்த மாதம் 16-ம் தேதி  தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு, 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று வாதாத்தை எடுத்து வைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என சபாநாயகர் தனபாலுக்குக் முதல்வர் கடிதம் அனுப்பினார். 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் மனுதாரர்களான சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 11 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை எனவும், அரசுக்கு எதிராக வாக்களித்ததை மன்னித்துவிட்டதாகவும் முதல்வர் தனக்கு எழுதிய கடிதம் உள்ளிட்ட விவரங்களை சபாநாயகர் பதில் மனுவாகத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே இவ்வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.