பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் என்றார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்த அனைத்து துறையிலும் காணொலி மூலம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 21 நாட்கள் புதிய தொற்று இல்லை. இதற்காக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக உழைத்துள்ளனர். மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு உறுதுணையாக இருந்து பொறுமை காத்ததற்கு மனமார்ந்த நன்றி என செங்கோட்டையன் கூறினார்.