தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட்டு வந்த பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் தமிழகத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்று உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல் ஆளாக குரல் கொடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.