டெல்லியில் 104 எம்.எல்.ஏக்கள் குவிந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது இதனால், ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, ’ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பாஜக முழுமூச்சாக இறங்கி உள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு, சபாநாயகரை தவிர்த்து 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. இந்நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான தீவிர வேலைகளில் பாஜக செயல்பட்டு வருகிறது. 

அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் என 12 எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில், ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவையின் பலத்தை 207 ஆகக் குறைப்பது என்றும், இதன் மூலம் 104 உறுப்பினர்கள் இருப்பதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது என்றும் பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.


அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என 20 பேர் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.  அவர்கள் பாஜகவில் இணைய அமித்ஷாவிடம் நேரம் கேட்டு காத்திருகின்றனர்.  அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த 104 பாஜக எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் யாரும் ஊருக்கு செல்லக்கூடாது என எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 3 பேர் மும்பையில் பாஜக எம்எல்ஏ.க்களுடன் இருப்பதாகவும் கர்நாடக காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். ’’பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம். இருப்பினும் கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்ப்பதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது’’ என்று அவர் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார்கள் டெல்லி பிரமுகர்கள்.