நாடாளுமன்ற மக்களவையில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.  இதில் முக்கியமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த விவாதங்களுக்கு மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரி நரேந்திர சிங் தோமர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என சூசகமாக அறிவித்தார். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டமாக முன்னேற்றி இருக்கிறோம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 99 சதவீத தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கிலேயே பெற்று வருகிறார்கள். இதில் இடைத்தரகர் தொல்லை இல்லை.

இந்த திட்டத்துக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.55 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்ட நிதி, இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுக்கானது என்பதால், இந்த திட்டத்தை என்றென்றைக்கும் தொடர அரசுக்கு விருப்பம் இல்லை. இதை நீண்ட காலத்துக்கு தொடர எனக்கும் விருப்பம் இல்லை. ஏனெனில் இது ஏழைகளுக்கானது. மோடி அரசின் மிகப்பெரிய லட்சியமே நாட்டில் இருந்து வறுமையை அகற்றுவதுதான். அதை நோக்கியே செயல்பட்டும் வருகிறது என தெரிவித்தார்..