அரசியல் செய்யாமல் தேர்தலில் போட்டியிடுவது, ஆட்சியைப் பிடிக்க எண்ணுவது, தமிழக மக்களை தரம் தாழ்த்தி ரஜனி மதிப்பீடு செய்வதையே காட்டுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் "நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்" என்று பேசியதற்காகத் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின், அவ்வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டார். பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் கூடுதலாக பேசியதாகச் கூறி சென்னை மாநகரக் காவல்துறையால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை ஜார்ஜ் நகர 7வது நீதிமன்றத்தில் சீமான் அவர்கள் நேரில் ஆஜரானார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடந்த 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் "நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்" என்று பேசியதற்காக  திமுக ஆட்சியில் அப்போது பதிவுசெய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன், ஆனால் அன்றைய ஆர்பாட்டத்தில்  பத்து நிமிடம் கூடுதலாக பேசி விட்டதாக என் மீது பதியப்பட்ட வழக்கை 10 ஆண்டுகள் கழித்து தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தூசு தட்டி என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. அந்த வழக்கில் ஆஜராக நான் வந்திருக்கிறேன் என்றார். அப்போது செய்தியாளர்கள், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் நீங்களும் எதிர்ப்பது ஏன் என சீமானிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் இந்த மண்ணில் பிள்ளைகள். இந்தமண்ணை ஆளுவதற்கு எங்களுக்கே உரிமை உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் 70 வயது ஆகியும் திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார் அதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை, இன்னும் கூட கூடுதலாக 10 ஆண்டுகள் நடித்து விட்டுப் போகட்டும் அதை நாங்கள் கேட்டால் எங்களை செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் நடிகர் என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்று துடிப்பது மிகவும் மோசமான மனநிலை. அதுவும்  அரசியல் செய்யாமலேயே நேரடியாக தேர்தலில் இறங்குவது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என யோசிப்பது, தமிழக மக்களை மிகுவும் தரம் தாழ்த்தி, இழிவாக என்னும் ரஜினியின் மனநிலையைக் காட்டுகிறது. இதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நடிகர் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் சினிமாவைத் தாண்டி  தமிழகத்தைப் பற்றி என்ன அரசியல் அறிவுர புரிதல் இருக்கிறது. தாத்தா இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், சங்கரலிங்கம், அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், புலித்தேவன் இப்படி யாரைப் பற்றியாவது பத்து நிமிடம் அவர்களால்  பேச முடியுமா? 

வெறும் சினிமா வெளிச்சத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழக மக்களை ஆள துடிக்கிறார்கள். தமிழக மக்களை மிகவும் இழிவாக எண்ணுகிறார்கள். வரும் தேர்தலில் ரஜினியையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் விஜய் உள்ளிட்ட இனி எந்த சினிமா நடிகரும் சினிமா வெளிச்சத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரக் யோசிக்ககூட கூடாது இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.