அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில் அவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜரானார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நான் எப்போதும் இருப்பேன். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இது சித்தாந்த ரீதியான போராட்டம். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் நான் போராடியதை விட இனி 10 மடங்கு அதிக பலத்துடன் எதிர்கொள்வேன். என கூறினார்.
முன்னதாக மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியை வரவேற்றனர். அப்போது அவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.

வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளை விட்டு கொடுப்பதாக கூறியது குறித்து ராகுல் காந்தியிடம் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அவர், “வஞ்சித் பகுஜன் அகாடி அல்லது நவநிர்மாண் சேனா கட்சிகளின் வாக்கு வங்கியில் கவனத்தை செலுத்துவதை விட, காங்கிரஸ் தலைவர்கள் நமது கட்சியின் வாக்கு வங்கியை எப்படி பெருக்குவது என்பது சிந்திப்பதே சிறந்ததாக இருக்கும்” என தெரிவித்தார்.