நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது புதுச்சேரியில் ஒன்று என பத்து தொகுதிகள் ஒதுக்குவதாக பா.ஜ.க.விடம் அ.தி.முக. கெஞ்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி வென்றுவிட்டால் அ.தி.மு.க பெரும் தலைகளின் நிலை அதற்கு அடுத்து என்ன ஆகும் என்று கூறி தான் மிரட்டப்பட்டு வருகிறார்கள். 

மேலும் அ.தி.மு.கவை பொறுத்தவரையும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வாய்ப்புகள் இலலை. காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி என்று வரும் போது அதற்கு எதிராக பா.ஜ.க – அ.தி.மு.க என்பது தான் சரியாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை அ.தி.மு.கவால் தனியாக எதிர்கொள்ள முடியாது.

ஆனால் பா.ஜ.கவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதில் தற்போது பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. தொகுதி ஒதுக்கீட்டில் அ.தி.மு.க பிடிவாதம் காட்டியதால் தான் திருவாரூர் தேர்தலை அறிவிக்க வைத்து பயமுறுத்தியுள்ளது டெல்லி. இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு தற்போது பின்னடைவு தான், அதிலும் புயலால் பாதிக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் என்றால் சொல்லவா? வேண்டும். 

எப்படியாவது தேர்தலை நிறுத்துங்கள் தொகுதியை கூட குறைவாக பேசி முடித்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க தரப்பிடம் இருந்து டெல்லிக்கு தொடர்ந்து அனுப்பப்பட்ட சேதியின் விளைவாகவே திருவாரூர் தேர்தல் ரத்தானது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 12 புதுச்சேரியில் ஒன்று என 13 தொகுதியில் டீலை முடிக்குமாறு டெல்லி அ.தி.மு.க மேலிடத்திற்கு கூறியுள்ளது. 

ஆனால் தமிழகத்தில் ஒன்பது புதுச்சேரியில் ஒன்று என பத்தில் முடித்துக் கொள்ளலாம் என அ.தி.மு.க தரப்பு கெஞ்சாத குறையாக பா.ஜ.கவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.கவும் கூட தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் என்பது சரியாக இருக்கும் என்றே கருதுவதாக கூறப்படுகிறது. எனவே மோடி மதுரை வரும் போது கூட்டணி உறுதியாக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.