திருவள்ளூர் மாவட்டம் ஆயிலச்சேரி ஊராட்சிக்குட்பட்ட சிங்கிலிகுப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பொது மக்களின் பங்களிப்போடு புதிய பள்ளி கட்டடம் கட்டுவதைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி 3வயது முதல் 18வயது வரை உள்ளவர்களுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க வேண்டும் என தெரிவித்த நிலையில், 20க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையில் உள்ள அரசுப் பள்ளிகளை மூட கூடாது என்றார். 

 

அரசு பள்ளிகள் இருந்தால் தான் இலவச கல்வி தர முடியும் எனவும், அரசு பள்ளிகளை பாதுகாப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பதாக அர்த்தம் எனவும் கூறினார். அரசு பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக கட்டமைப்புகளை சீர்செய்து அவற்றை தரம் உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மத்திய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர் என கூறினார். 

70ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என நிதி ஆயோக் துணைத்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் எனவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி வரியை குறைத்ததால், பொருளாதார வளர்ச்சி குன்றியுள்ளது எனவும் கூறினார். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அதிமுக அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.