Asianet News TamilAsianet News Tamil

முட்டை வியாபாரிக்கு பட்டை நாமம் போட்ட பேபிம்மா... பதவி தருவதாக 1 கோடி ரூபாயை ஆட்டையை போட்ட கொடுமை!

1 crore cheating complaint against J Deepa in Chennai
1 crore cheating complaint against J Deepa in Chennai
Author
First Published Feb 5, 2018, 1:50 PM IST


தன்னிடம் வாங்கிய ரூ.1 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா மீது சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரியான ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, இந்த புகார் மனுவில்; எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன்.

1 crore cheating complaint against J Deepa in Chennai

அவரது கார் டிரைவர் ராஜா என்னை தொடர்பு கொண்டு தீபா மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவசர கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தி.நகரில் உள்ள வீட்டில் மராமத்து வேலைகள் இருப்பதாகவும் கூறினார். இதற்காக ரூ.50 லட்சம் கடனாக வேண்டும் என்று தீபா கூறியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நான் தீபாவிடமும், ராஜாவிடமும் ரூ.50 லட்சம் கடனாக வழங்கினேன்.

இதன் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதாக தீபா என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சம் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் வீட்டில் இருந்த ரூ.50 லட்சத்தை திருடிச் சென்று விட்டதாக தீபாவும், ராஜாவும் அழுது புலம்பி கண்ணீர் வடித்தனர். மீண்டும் அவசிய செலவுக்காக ரூ.10 லட்சம் கேட்டனர். இந்த பணத்தையும் ராஜா முன்னிலையில் தீபாவிடம் கொடுத்தேன். அதுபோல தீபாவும், ராஜாவும் கட்சியினருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி உள்ளனர். வேணு என்பவரிடம் ரூ.2½ லட்சம், குடியரசு என்பவரிடம் ரூ.1 லட்சம், வெங்கடேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம், கோவை சாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரம், சிவக்குமாரிடம் ரூ.30 ஆயிரம் என என்னிடம் கட்சியில் பதவி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டனர்.

1 crore cheating complaint against J Deepa in Chennai

இதன்படி தீபாவும், அவரது கார் டிரைவர் ராஜாவும் ரூ.1 கோடியே 12 லட்சம் மோசடி செய்துள்ளனர். நான் உழைத்து சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு என்னை மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன், மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டனர். இந்த பணத்தை திருப்பி கேட்டபோது தீபாவும், மாதவனும் நேரிலும், ராஜாவின் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு குறித்த உரிய விசாரணை நடத்த கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios