அதிமுகவுடன் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரே நேரத்தில் திமுகவுடனும் கூட்டணிக்கு தூது விட்டது அம்பலமானதால் தேமுதிக குழப்பத்தில் உள்ளது. இதனால் திமுக, அதிமுக இல்லாத மூன்றாவது கூட்டணியில் இணையலாமா என தேமுதிக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

மகளிர் தினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவையும் வம்பிற்கு இழுத்திருந்தார். அத்தோடு கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இது அதிமுக நிர்வாகிகளை மட்டுமல்ல பாஜக தலைமைக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணி அமைக்க உள்ள நிலையில் பிரேமலதா கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் என அமைச்சர்களும், அம்மாவை எதிர்த்ததில் இருந்தே விஜயகாந்தின் அழிவு ஆரம்பித்து விட்டது என அதிமுக எம்.எல்.ஏ சூளூர் கனகராஜும் வெளிப்படையேகவே விளாசித்தள்ளினர். 

திமுக கூட்டணிக்கு கதவை சாத்தி விட்டதால் அதிமுகவை விட்டால் தேமுதிகவுக்கு வேறு வழியே இல்லாததால் 4 சீட்டுகளை மட்டுமே அதிமுக முன் வந்ததாகக் கூறுகிறார்கள். இது தேமுதிக தரப்பை அதிர்ச்சியடையச் செய்தது. இதையும் தாண்டி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றால் முன்பிருந்த மரியாதை கிடைக்குமா? வடமாவட்டங்களில் பாமக உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் எனத் தயங்கிய தேமுதிக கூட்டணியை மாற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி குக்கர் விசிலடித்தால் இணைந்து முரசு கொட்டலாம் என தேமுதிக ரூட்டை மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் முதலில் இறங்கி வருவது என்கிற தயக்கம் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்து வருகிறதாம். அதன்படி அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தன்னை எழுச்சி நாயகனாக நினைத்து இறங்கி வர மறுக்கிறார். தற்போதைய நிலையில் நமது கட்சி தான் கிங் மேக்கர் என நினைக்கும் தேமுதிக தலைமை கருதுகிறது.    

ஆகையால் கோயம்பேடு அலுவலகத்தை தேடி டி.டி.வி வரவேண்டும் என பிரேமலதாவும், தங்களை தேடி வரவேண்டும் என டி.டி.வியும் நினைத்து வருகிறார்கள். அப்படியே இறங்கிப் போனாலும் கூட்டணிக்கு எந்தக் கட்சி தலைமை வகிப்பது என்கிற குழப்பமும் உள்ளது. சசிகலாவை நம்பி போகலாம். ஆனால், அவர் உள்ளே இருக்கிறார். டி.டி.வி.தினகரனை நம்பிப்போனால் அவரது ராஜ்ஜியம் தான் அதிகம் இருக்கும். ஆகையால், அவர் நம்மை இரண்டாம் பட்சமாகத்தான் நடத்துவார் என கருதுகிறார் பிரேமலதா.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் மைத்துனரை அழைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் முடிவை அறிவிக்காமல் இருப்பது? நமது கட்சித் தொண்டர்களுக்கே குழப்பம் வராதா? ஏற்கெனவே இவ்வளவு நாட்களாக கட்டிக்காத்து வந்த மானத்தை கெடுத்து விட்டீர்கள். எந்தக் கூட்டணியாக இருந்தாலும் சரி. அங்கு இரண்டு எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால், கூட்டணியை ஏற்படுத்துவதில் இன்னும் குழப்பாமல் உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ எனக் கறாராக கூறி இருக்கிறார். 

இதனால், விரைவில் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணி அமமுகவுடனா? அல்லது அதிமுகவுடனா? என்கிற குழப்பத்தில் இப்போது வரை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது தேமுதிக.