இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தை விபச்சார விடுதி என்று பதிவிட்டு சமூக ஊடங்களில் ஒரு தரப்பினர் உலவவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கொந்தளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்தப் பதிவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது. களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத்தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளுங்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.