’நம்பிக்கை துரோகம் செய்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை எந்த நிலையிலும் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற விடக்கூடாது. அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என டி.டி.வி.தினகரன் அடிபட்ட பாம்பாய் சினம் கொண்டு சீறி வருவதாகக் கூறுகிறார்கள். 

தனது ஆதரவாளர்களில் டி.டி.வி.தினகரன் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தது செந்தில் பாலாஜி மீதுதான். அதேபோல் தனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் சசிகலா குடும்பம் என்பதால் செந்தில் பாலாஜியும் அவ்வப்போது அந்த நன்றியை வெளிப்படுத்தி வந்தார். அமமுகவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளாக மேற்கு, தெற்கு மாவட்டங்கள் நம்பிக்கையளித்து வந்தன. மேற்கு பகுதியை செந்தில் பாலாஜி இருக்கும் வரை அசைக்க முடியாது என மலையைப் போல நம்பி இருந்தார் டி.டி.வி.தினகரன். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் பிரிந்து சென்றபோது கூட கலங்காத டி.டி.வியை செந்தில் பாலாஜி பிரிந்து சென்றது வெகுவாகவே அப்செட்டாக்கி விட்டதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். செந்தில் பாலாஜி விலகிச் செல்வதாக வதந்தி பரவியபோது, டி.டி.வி.தினகரன் அருகில் இருந்தவர்கள் நம்பியபோதும் அவர் இறுதி வரை ‘அவர் நம்மை விட்டுப் போக மாட்டார்’ என கூறி வந்திருக்கிறார். அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாம் மோசம் போய் விட்டோம் எனக் கருதி செந்தில் பாலாஜி பெயரைக் குறிப்பிடாமல் தூக்க நிலையில் இருக்கிறாரா? அல்லது தூக்கப்பட்ட நிலையில் இருக்கிறாரா? என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் டி.டி.வி. 

‘’மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த விஸ்வரூப வளர்ச்சியை அடைந்திருக்கிறோம்... அடக்குமுறையையும், அநீதியையும் கடந்து தான் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளோம். அச்சுறுத்தல்களையும், அராஜாகங்களையும் எதிர்கொண்டு தான் இந்த அபார வளர்ச்சியை கண்டிருக்கிறோம். திரும்பிய திசையெல்லாம் தடைகள் இருந்தபோதும் தடந்தோள்தட்டி தடம் பதித்த வெற்றியினை ஆர்.கே.நகரில் பெற்றோம். துரோக பழனிசாமி கூட்டத்திற்கு தோல்வியை தந்து எதிர்கட்சி என மார்தட்டிய திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து ஒரு சுயேட்சையாக வாகை சூடி நின்றோம். 

இந்த எழுச்சியை தடுக்கவும் மக்கள் பணியில் நமது எழுச்சியை தடுக்கவும், மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தை முடக்கவும் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துரோகிகளும் நம் எதிரிகளும் முழுமூச்சாகவும், தீவிரமாகவும் அதில் ஈடுபட்டுள்ளனர். துரோகத்தை வேரருக்க தியாகத்தின் பின் அணிவகுத்து நிற்கின்ற நம்மை மீண்டும் அவர்களோடு இணைய அழைக்கும் துரோகக் கூட்டத்தின் செயலும் சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான்.

அமமுகவை யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது. சீண்டிப் பார்க்கவும் முடியாது. அப்படிச் செய்தால் அது உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம்’’ என அவரது அறிக்கையில் இருந்தது. 

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த அதிர்வில் இருந்து மீளாத டி.டி.வி.தினகரன், செந்தில் பாலாஜியின் அரசியல் இத்தோடு அஸ்தமித்துப்போக வேண்டும். இனி அவர் எந்தத் தேர்தலில் நின்றாலும் என்ன விலை கொருத்தேனும் அவரைத் தோற்கடித்தே ஆக வேண்டும். ஓ.பி.எஸ்- ஈபிஎஸைக் கூட மன்னிப்பேன். இந்த செந்தில் பாலாஜியை இனி சும்மா விடமாட்டேன்’’ என டி.டி.வி கொக்கரித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.