மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?
மாதவிடாய் காலத்தில் யோகா செய்வது குறித்து பலரிடையே அச்சம் நிலவுகிறது. யோகா என்றில்லை, பலரும் சாதாரண உடற்பயிற்சி செய்யவே அஞ்சுகின்றனர். இந்த பழக்கம் பாதுகாப்பானது தானா?
உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவர்கள் சரியான வாழ்க்கை முறையை அறிவுறுத்துகிறார்கள். அதில் முறையான உணவுப் பழக்கங்கள், உணவு உட்கொள்ளும் நேரம், உணவு உட்கொள்ளும் அளவு ஆகியவையும் அடங்கும். உணவு சாப்பிட்டதும் என்ன செய்யலாம்? உடல்நிலை சரியில்லாத போது எதுபோன்ற உணவை சாப்பிட வேண்டும்? எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது? போன்ற கேள்விகளும் உணவு சார்ந்த விஷயங்களில் பலரிடையே நிலவுகிறது.
அந்த வரிசையில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில், அவர்களுடைய செயல்பாடுகள் குறித்து பல சந்தேகங்கள் நிலவுகின்றன. அதில் ஒன்று தான் மாதவிடாய் நாட்களில் யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது. இதுகுறித்து மருத்துவத் துறையினர் கூறுகையில், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. அதுதொடர்பான செயல்பாடுகளிலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. பலருக்கும் உடலில் பல்வேறு இடங்களில் வேதனை ஏற்படும், உடல் சோர்ந்து போகும், பலவீனமான உணர்வை தரும். குறிப்பிட்ட பிரச்னைகளை கணக்கிட்டு, நமக்கான ஆற்றலை சேர்த்துக் கொண்டு, யோகா போன்ற உடற்பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றன. மாதவிடாய் காலத்தில் இந்த சோர்வு உடலில் சேர்வது சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் குறிப்பிட்டக் காலத்தில் ஏற்படும் சோர்வை ஏற்றுக்கொண்டால், பிற்காலத்தில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!
அதற்காக சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆற்றலை சேகரிக்காமல் எந்தவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை தான் மருத்துவ உலகம் கூறுகிறது. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். அதுபோன்ற வேதனைகளில் இருந்து விடுபடுவதற்கு யோகாவில் பல பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை வேறுசில பிரச்னைகள் இருந்தாலும், அதற்கும் யோகாவில் வழிவகை வழங்கப்பட்டுள்ளன.
மாதவிடாய் காலங்களில் பலர் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கின்றனர். பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மனதில் அமைதியின்மை குடிகொள்கிறது. அவர்கள் மன அமைதி பெற மாதவிடாய் நாட்களில் யோகா செய்யலாம். யோகா மன திருப்தியைத் தரும். உங்கள் உடல் பலவீனமாக உணர்ந்தால், யோகா செய்ய மறக்காதீர்கள். மன அமைதி பெற தொடர்ந்து யோகா செய்யலாம். எதுவாக இருந்தாலும் உடலின் நிலையைப் புரிந்துகொண்டு முடிவு எடுங்கள்.