குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சரும வறட்சி, உதடுகள் வெடிப்பு, தோல் உரிதல், பொடுகு உள்ளிட்ட  பல்வேறு சருமப் பிரச்னைகளையும் உண்டாக்குகிறது.  

இயற்கை அழகு நிறைந்த மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு நாம் அனைவரும் குளிர்காலத்தோடு, ஓமிக்கிரன் கொரோனாவையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வழக்கத்தை விட இந்த வருடம் குளிரின் அளவு அதிகமாக இருக்குமோ என்பதில் தொடங்கி, உடல் நல குறைபாடுகள் ஏற்படுமா என்பது வரையிலான சந்தேகங்கள் ஏராளம். எனவே, குளிர் காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க முக்கிய எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 குளிர்கால சரும பிரச்னைகளுக்கு வீட்டிலேயே இருக்கும் பொருள்களை வைத்து தீர்வுகாணும் 6 எளிய வழிமுறைகள் ஏராளம். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பீட்ரூட் ஜூஸ் மற்றும் தேன்:

பொடித்த சர்க்கரை, பீட்ரூட் ஜூஸ், தேன் ஆகிய மூன்றையும் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உதடுகளில் தடவவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு லேசாக மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும். தினமும் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால், உதடுகள் மென்மையாக மாறும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்:

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கற்றாழை ஜெல் ஆகிய மூன்றையும் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மைல்டான ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசினால் குளிர்காலத்தில் வறட்சியால் ஏற்படும் முடி உதிர்வு கட்டுப்படும்.

கற்றாழை ஜெல் மற்றும் கஸ்தூரி மஞ்சள்:

கற்றாழை ஜெல், கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி, கைகளால் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் சருமம் பளபளக்கும்.

கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூள்:

அரிசி ஊறவைத்த தண்ணீர், கற்றாழை ஜெல் மஞ்சள் தூள் - சிறிதளவு, கிளிசரின் - ஒரு டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சருமத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ, சருமம் மின்னும்.

வாழைப்பழத்துடன் தேன் கலந்து தடவுதல்:

வாழைப்பழத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து குழைத்து, முகத்தில் பேக் போல தடவி, பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், குளிர்காலத்தில் சரும வறட்சி, தோல் உரிதல் போன்ற பிரச்னைகள் காணாமல் போகும்.

ஃபேஷியல்:

ஃபேஷியல் செய்து கொள்ளும் போது சருமம் ஆழமாகத் தூய்மை செய்யப்படுகிறது. இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. முகத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சியாக வைக்கிறது. ஃபேஷியலில் செல் உதிர்ப்புப் பொருட்களான எக்ஸ்போலியன்ட்ஸ், மாஸ்குகள், பீல்ஸ் ஆகியவை இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகின்றன. ரத்த ஓட்டத்தை மேலும் சிறப்பாக ஊக்கப்படுத்துகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றிப் புத்துயிரூட்டுகிறது.

எனவே , மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் மற்றும் சருமத்தை மென்மையாகவும், வைத்து கொள்ள வாழ்த்துக்கள்!