சமையல் செய்ய எந்த எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

உணவு சமைக்க எண்ணெய் அடிப்படையானதாக மாறிவிட்டது. எண்ணெய் தீர்ந்துவிட்டால் அது இல்லாமல் ஒருநாள் சமைப்பார்கள். ஆனால் மறுநாளே வாங்கிவிடுவார்கள். பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம் எண்ணெய் இல்லாமல் அணுவும் அசையாது.

ஆனால் ஒரு மனிதருக்கு நாளொன்றுக்கு சுமார் 15 மில்லி முதல் 25 மில்லி வரை மட்டுமே எண்ணெய் தேவை. அதாவது 3 முதல் 5 டீஸ்பூன் தான் தினசரி தேவை. இது உடலின் ஒட்டுமொத்த கொழுப்புத் தேவையின் ஒரு பகுதிதாம். பால், முட்டை, இறைச்சி ஆகிய உணவுகளில் இருந்தும் நமக்கு தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும். அதனால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைத் தவிர்த்து மரச்செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

உணவில் எண்ணெய் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு வீடுகளிலும் கடலை எண்ணெய் முதல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வரை வெவ்வேறு எண்ணெய்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எது ஆரோக்கியத்திற்கு ஏற்றது? இதய ஆரோக்கியம், எடை குறைப்பு போன்ற ஆரோக்கிய நன்மைகளை பெற எதை பயன்படுத்த வேண்டும் என இங்கு காணலாம்.

தேங்காய் எண்ணெய்

மரச்செக்கு தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் உணவு விரைவாக கெட்டுப்போகாது. இதனுடைய குறைவான எண்ணெய் தன்மை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வேர்க்கடலை எண்ணெய்:

வேர்க்கடலை எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இதில் சமைத்தால் உணவின் சுவையும் தரமும் நன்றாக இருக்கும்.

நெய்

நெய் பல ஊட்டச்சத்துக்களை கொண்டது. சற்று விலை உயர்ந்தது. ஆனாலும் மூளைக்கு நன்மை செய்யும் பண்புகள் கொண்டது. குடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதை கொஞ்சமாக சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

அவகேடோ எண்ணெய்:

இது நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சிறந்த எண்ணெய்களில் இதுவும் ஒன்று. இதில் நல்ல நறுமணம் உள்ளது. இந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள் சுவையும், ஆரோக்கியமும் வாய்ந்தது.

பாமாயில்

பலரும் பயன்படுத்தும் பாமாயில் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, நல்ல கொழுப்புகள் இருந்தாலும் இதை அதிகமாக பயன்படுத்தினால் கெட்ட கொழுப்பு அதிகமாகிவிடும். இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். பொரிக்க மற்ற எண்ணெய்களை விட பாமாயில் சிறந்து. இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது. ஆனால் அதிகமான பயன்பாடு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த எண்ணெய் பலர் வீட்டில் இருந்தாலும் மிகக் குறைவாக பயன்படுத்துவது நல்லது.

இந்த எண்ணெய்கள் நல்ல பண்புகள் கொண்டிருந்தாலும் அளவாகவே பயன்படுத்த வேண்டும். எதையும் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அளவாக பயன்படுத்தினால் உடலை நன்றாக பராமரிக்க முடியும்.