மனிதர்களால் 10 உறுப்புகள் இல்லாமல் வாழ முடியுமாம். அந்த உறுப்புகள் என்னென்ன? எப்படி இது சாத்தியம் என இங்கு காணலாம்.
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே நாம் வாழ அத்தியாவசியமானவை என சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட 78 உறுப்புகள் நம் உறுப்பு மண்டலத்தில் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 10 உறுப்புகள் இல்லாமல் கூட வாழ முடியும் என நியூயார்க் போஸ்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில் நார்த்வெல் ஸ்டேட்டன் தீவு பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் இந்திரநீல் முகர்ஜி கூறினார்.
லூயிஸ் ஆல்டீஸ்-இசிடோரிய என்பவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் புற்றுநோய் பரவியதால் அவரது உயிரைக் காப்பாற்ற 7 உறுப்புகள் அகற்றப்பட்டன. இப்போது அவர் நலமடைந்து சாதாரண வாழ்க்கையை தொடர்கிறார். உடல் உறுப்புகளை இழந்த பின்னும் நலமான வாழ்வு எவ்வளவு ஆச்சர்யம் இல்லயா? அது குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
குடல்முளை
நம் உடலினுள் காணப்படும் இரைப்பையை ஒட்டியுள்ள சிறு உறுப்பு தான் குடல்முளை. இதை பொதுவாக அப்பென்டிக்ஸ் (appendix) என்பார்கள். இதற்கு தனித்த செயற்பாடு எதுவும் இல்லை. இதை அகற்றினாலும் சில நாட்களில் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
பித்தப்பை
உடலின் மிகப்பெரிய செரிமான சுரப்பியான கல்லீரலுக்கு கீழே தான் பித்தப்பை உள்ளது. இது பித்தநீரை சேமித்து வைத்திருக்கும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் அப்போது செரிமானத்திற்காக குடலுக்குள் சுரக்கும். ஆனால் பித்தப்பை இல்லாமல் கூட நம்மால் வாழ முடியும். கல்லீரலே போதுமான அளவு பித்தநீர் சுரந்துவிடும்.
கிட்னி
நம் உடலில் உள்ள இரத்தம் மற்றும் கழிவுகளை சுத்திகரிக்க கிட்னி அவசியம். ஆனால் இரண்டு கிட்னிக்கு பதில் ஒன்று இருந்தாலும் நலமுடன் வாழமுடியும். அவ்வப்போது மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ஆசனவாய்
உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் வகையில் இயற்கையாக நமக்கு கிடைத்த உறுப்பு ஆசனவாய். ஆனால் அதை அகற்ற நேர்ந்தால், மருத்துவர்கள் வயிற்றுச் சுவர் வழியாக புதிய திறப்பை ஏற்படுத்தி கழிவுநீக்க செயல்முறையை நடைமுறைப்படுத்துவார்கள்.
கோலன்
மலக்குடலை தவிர வயிற்றிலிருந்து நீர், ஊட்டச்சத்துகளை உறிஞ்சி எடுத்துச்செல்லக் கூடிய பெருங்குடலின் ஒரு பகுதிதான் இந்த கோலன். இது இல்லாமல் கூட நம்மால் இயங்க முடியும். இது இல்லாமல் போனாலும் உணவுப் பழக்கம், மருந்துகளால் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
நுரையீரல்
நுரையீரல் இல்லாமல் வாழ்வது கடினம்தான். நுரையீரல் இல்லாவிட்டால் சுவாச திறன் குறையும். மீதம் இருக்கும் நுரையீரல் கடினமாக செயல்பட வேண்டியிருக்கும். நாளடைவில் உடல் அதற்கு ஏற்றார் போல மாறிவிடும். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் கடினமானது.
சிறுநீர்ப்பை
சிறுநீர்ப்பை பகுதியளவு நீக்கம் செய்யப்பட்டால், மொத்த சிறுநீரையும் சிறுநீர்ப்பையால் தாங்க முடியாது. அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனை முற்றிலுமாக நீக்கினால் யூரோஸ்டமி செய்து சிறுநீரை வெளிப்புற பைக்கு மாற்றுவார்கள். இது உயிர்வாழ மற்றொரு வழியாக அமையும்.
இதைப் போலவே உணவுக்குழாய், வயிற்றில் உள்ள சில உறுப்புகள் என கிட்டத்தட்ட 10 உறுப்புகள் இல்லாமலும் மருத்துவ உதவியுடன் வாழமுடியும். நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உணவுப் பழக்கமும், மனநலமும்தான் அடிப்படையாகும்.
