தினமும் 5 ஆயிரம் காலடிகள் நடந்தால்.. எல்லாருக்கும் வர்ற இந்த '1' நோய் உங்களுக்கு வராது..!
Walking and Depression : தினமும் 5 ஆயிரம் காலடியில் நடப்பவர்களுக்கு மனச்சோர்வு இருக்காது. மேலும் கிடைக்கும் அற்புத நன்மைகளை இங்கு காணலாம்.
நடைபயிற்சி உடற்பயிற்சியில் உள்ள எளிமையான பயிற்சியாகும். நாள்தோறும் நடப்பது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் நல்ல பலன்களை தருகிறது. இந்தாண்டு செய்யப்பட்ட ஆய்வில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை குறைப்பதில் நடைபயிற்சி முக்கிய பங்கு வைப்பதாக தெரியவந்துள்ளது. மெட்டா பகுப்பாய்வில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்களை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சியில் தினமும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் காலடிகள் நடப்பவர்களுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.
நடைபயிற்சி மூளைக்கு உதவுவது எப்படி?
நடைபயிற்சி செல்வது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. நடைபயிற்சி மேற்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்பட்டு பெருமூளை இணைப்பு, புதிய மூளை செல்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்களே மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. மனச்சோர்வு அறிகுறிகளை குறைத்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கிறது. அறிவியல்பூர்வமாக நடைபயிற்சி மேற்கொள்வது மனநிலையை சீராக வைக்கும் எண்டோர்பின்களை ஊக்குவிக்கிறது. நாள்தோறும் நடப்பவர்களுடைய மன அழுத்தம் குறைய மற்றொரு காரணம் உண்டு. நடப்பதால் மன அழுத்தம் கொடுக்கும் ஹார்மோனான கார்டிசோல் சுரப்பு குறையும்.
இதுதவிர உங்களுடைய அறிவாற்றல் மேம்பட நடைபயிற்சி உதவுகிறது. பொது இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இயற்கை சூழலை பார்ப்பதும், சூரிய ஒளியை எடுத்துக் கொள்வதும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உங்களுடைய தூக்கம் மேம்பட நடைபயிற்சி உதவுகிறது. நல்ல தூக்கம் மன அழுத்தத்தை தடுக்க முக்கிய காரணியாகும்.
இதையும் படிங்க: நீங்க வாக்கிங் போறப்ப இந்த '5' விஷயங்களை பண்ணாட்டி நடக்குறதே வேஸ்ட்!!
எவ்வளவு நடக்க வேண்டும்?
நீங்கள் மணிக்கணக்காக நடக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 முதல் 40 நிமிடங்கள் நடந்தாலே உங்களுடைய மனச்சோர்வுக்கான அறிகுறிகள் குறையும். ஒவ்வொரு நாளும் உங்களுடைய காலடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, அதாவது ஒரு நாளுக்கு நீங்கள் 1000 காலடிகள் நடந்தால் கூட மன அழுத்த அறிகுறிகளை 9 சதவீதம் குறைக்கலாம். ஒருவர் 7 ஆயிரம் காலடிகளுக்கு அதிகமாக நடப்பதால் 31% மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல மன ஆரோக்கியமும் மேம்படும்.
இதையும் படிங்க: ஈஸியா எடையை குறைக்க சாப்பிட்டதும் 'எத்தனை' நிமிஷம் நடக்கனும் தெரியுமா?
5000 காலடிகளை எப்படி நடப்பது?
நீங்கள் நாள்தோறும் 5000 காலடிகளை நடப்பது மிகவும் எளிமையான விஷயம். தினமும் காலை, மாலை, மதியம் என மூன்று வேளையும் உணவுக்கு பின்னர் 10 முதல் பதினைந்து நிமிடங்கள் நடந்தாலே போதும். இப்படி ஒரு வாரத்திற்கு 5 முதல் 6 நாட்கள் ஐந்தாயிரம் காலடிகளை நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தனியாக நடக்க விருப்பம் இல்லாவிட்டால் நண்பர்கள், குடும்பத்தினரை உங்களுடன் நடக்க கூப்பிடலாம். இது மட்டும் இல்லை அலுவலகத்தில் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் செல்வது, அருகாமையில் உள்ள இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்வது போன்ற மாற்றங்களை செய்வதும் நல்லது.