மதுரை அருகேயுள்ள மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லாத்தால் செல்போன் வெளிச்சத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வரும் அவல நிலை அக்கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகேயுள்ளது இரும்பாடி கிராமம். அக்கிராமத்தில் பல ஊராட்சி தலைவர்கள் மாறிமாறி பதவி வகித்து வந்த நிலையிலும் மயானத்திற்கு தேவையான போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் இறந்து போனார்.அவரது இறுதி சடங்கு ஊருக்கு வெளியே உள்ள வைகை ஆற்று கரையோரம் எவ்வித வசதியின்றி அமைந்துள்ள மயானத்தில் நடந்தது. அப்போது மின்விளக்கு இல்லாததால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உறவினர்களின் செல்போன் வெளிச்சத்தில் மிகவும் சிரமத்துடன் இறுதி சடங்குகளை செய்து பின்னர் உடலை  எரியூட்டினர்.

எரியூட்டிய அனலை அணைக்க கூட தண்ணீர் இன்றி வைகை ஆற்றிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் ஐந்தாயிரம் ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இரும்பாடி கிராமத்திற்கு வைகை கரையோரம் உள்ள சுடுகாடு பொது மயானமாக இருந்து வருகிறது. மயானத்தில் மின்சார வசதி இருந்தும் மின்விளக்கு இல்லை. மேலும் அடிகுழாயும் பழுதாகி பல ஆண்டுகளாக சரி செய்யபடாததாதல் சுடுகாட்டில் செய்யவேண்டிய சடங்குகளுக்கு தேவையான தண்ணீர் எடுக்க வைகை ஆறு மற்றும் தனியார் தென்னந்தோப்பு மின் மோட்டர் தொட்டிகளிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து சடங்குகள் செய்து அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எம்பி, எம்எல்ஏ க்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என புகார் வாசிக்கிறார்கள் அக்கிராமம் மக்கள்.

 T Balamurukan