Asianet News TamilAsianet News Tamil

ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை கண்டு அஞ்சுவது ஏன்..? அச்சுறுத்தும் பின்னணி..!!

இந்தியாவில் விற்பனையாகும் கெளுத்தி மீன்கள் மிருதுவான தன்மை கொண்டவை. ஆறு, குளங்களிலும் வாழும் இந்த மீன்கள் உண்பதற்கு உகந்தவை. ஆனால் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் என்று சொல்லப்படும் நீர்வாழ் உயிரினம் உணவுச் சங்கலிக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை மீன்கள் வழுவழுப்பாகவும் நீளமாகவும் இருக்கும் மேலும் இது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கலந்து காணப்படும். அதிகக்கொழுப்புடன் இந்த மீன்கள் இருப்பதால், இந்திய வகை கெளுத்தி மீன்களுடன் அடையாளம் காண்பது கடினம். எனினும், மீனின் வாயிக்கு அருகில் முளைக்கும் மீசையை வைத்து ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை கண்டறியலாம்.
 

tons of banned african catfish destroyed at dharmapuri
Author
First Published Sep 14, 2022, 10:52 PM IST

மத்திய மாநில அரசுகள் தடை

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அரசும் மாநில அரசும் இவ்வகை மீன்களுக்கு இந்தியாவில் தடை விதித்துவிட்டது. எனினும், தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அவ்வப்போது ஆப்ரிக்க வகை மீன்கள் வளர்த்து விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தகவலறிந்து மீன் பண்ணைகளை சீல் வைக்க அதிகாரிகள் சென்றாலும், தாங்கள் உள்ளூரில் விற்பனை செய்வதில்லை என்றும் கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவதாக மீன் பண்ணை உரிமையாளர்கள் சரிகட்டி விடுகின்றனர்.

ஏன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை சாப்பிடக் கூடாது?

இந்த மீன்கள் மற்ற நீர் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தாங்கள் வாழ்வதற்காக மற்ற நீர்வாழ் உயிரினங்களை இரையாக உண்டு அழித்துவிடும் தன்னை கொண்டது ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள். தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இம்மீன் வகைகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் மற்ற நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அசுத்தமான சூழலில் வளரும் தன்னை கொண்ட மீன்கள்

ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கழிவுநீர், ரசாயன கழிவுநீர், குளம், குட்டை உட்பட எப்படிப்பட்ட அசுத்தமான தண்ணீரிலும்  வாழும் தன்மை கொண்டவை. நீரிலிருந்து நிலத்தில் பிடித்துப்போட்டால் 2 நாட்கள் வரை உயிருடன் இருக்கக்கூடியது தான் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள். இப்படி ஆபத்தான தன்மை கொண்ட இந்த மீன்கள் தருமபுரியில் மாவட்டம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கிருஷ்ணகிரியில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட பண்ணைகளில் முறைகேடாக வளர்க்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு தருமபுரியில் மீட்கப்பட்ட முறைகேடாக செயல்பட்ட பண்ணைகளை அதிகாரிகள் அழித்தனர்.

புற்றுநோய் பாதிப்பு உருவாகக்கூடும்

அசுத்தமான சூழ்நிலைகளில் வாழும் தன்மை கொண்டது என்பதால், நீர்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமில்லாது மனித உடலுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இவ்வகை மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்டவை ஆபத்தான அளவில் உள்ளன. இதனை உண்போருக்கு தோல் வியாதிகள், ஒவ்வாமைகள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரத்த சோகை, தோல் அரிப்பு தொடர்பான பிரச்னைகளும் உருவாகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தொடர்ந்து உண்டால், அவர்களுக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மீண்டும் அச்சுறுத்தம் ஆஃப்ரிக்க கெளுத்தி மீன்கள்

தமிழ்நாட்டில் ஆப்பரிக கெளுத்தி மீன்களை வளர்க்க கூடாது என மீன் வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், தருமபுரி மாவட்டத்தில் 32 இடங்களில்  குட்டை அமைத்து மீன்கள் வளர்க்கப்படுவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் மதுபான பார்களுக்கும், கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தருமபுரியிலுள்ள மதிகோண்பாளையம் பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமனன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு 3  குட்டைகளில் வளர்கப்பட்டு வந்த 5 டன் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை  பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றி  மண் போட்டு மூடி அழித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios