ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நீங்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பனவற்றை, கீழே படித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

இன்றைய நவீன உலகில் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இணையம் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, இணையம் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் இணையம், மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. இது பல்வேறு வசதிகளை நமக்கு செய்து தந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பணப் பரிமாற்றம் (Online Money Transfer) அதிக அளவில் ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது. இருப்பினும், ஆன்லைன் பண பரிவர்த்தனையில் போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் சாதாரணமாக நடக்கும் செல்போன் திருட்டு நமக்கு பல்வேறு சிக்கலுக்கு வழி செய்கிறது. 

 எனவே, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நீங்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பன வற்றை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இனிமேல், பணம் செலுத்தும் போது கவனமாக இருங்கள்.

ஓ.டி.பி. என்னை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாது: 

எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. எந்த வங்கியும் தன் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணையோ, பாஸ்வேர்டையோ தொலைபேசி மூலம் கேட்டதில்லை. கேட்கவும் மாட்டார்கள். ஆனால், ஆன்லைன் திருட்டு கும்பல் வங்கியிலிருந்து பேசுவதாக ஏமாற்றி ஏ.டி.எம். எண்ணை கேட்டறிந்து பணத்தை அபகரிப்பது ஆங்காங்கே நடக்கிறது. இதில் அவசியம் கவனம் தேவை.

மொபைல் எண் மற்றும் UPI ஐடியில் தவறு செய்யாதீர்கள்:

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை UPI மூலம் செய்கிறார்கள். மொபைல் எண் மற்றும் UPI ஐடியை உள்ளிட்டு மக்கள் ஒருவருக்கொருவர் பணத்தை அனுப்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், மொபைல் எண் மற்றும் UPI ஐடியை நிரப்பும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், தவறாக நிரப்ப வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.

வங்கி கணக்கு விவரங்களை சரியாக நிரப்பவும்:

வங்கிக் கணக்கு விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் சிறிய தவறு தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பப்படலாம். பணத்தை வேறொரு வங்கிக்கு செலுத்த ஆன்லைன் மூலம் செய்யப்படும் NEFT, IMPS மற்றும் RTGS போன்ற பரிவர்த்தனைகளை பயன்படுத்தலாம்.

 IFSC குறியீடு குறித்து எச்சரிக்கை:

நாம் ஒருவருக்கு பணத்தை மாற்றும்போது, ​​கணக்கு எண்ணுடன் IFSC குறியீட்டை உள்ளிடுவோம். ஆனால் நீங்கள் தவறான IFSC குறியீட்டை உள்ளிட்டால், அந்த கிளையின் IFSC குறியீட்டுடன் கணக்கு எண்ணும் பொருந்தினால், உங்கள் பணம் தவறான கணக்கிற்குச் செல்லலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

எனவே, உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நொடிப்பொழுதில் விட்டுவிடக் கூடாதவாறு பாதுகாப்பான பரிவர்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

செல்போன் தொலைந்து விட்டால், உடனே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பட வேண்டும். மேலும், வேறொரு போன் மற்றும் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி, வேறு யாரும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாத படி உடனே பிளாக் செய்து விட வேண்டும். 

சமீப காலமாக சர்வதேச இணையத் திருடர்கள் செல்போனை ஹேக் செய்து தனிமனித தகவல்களான போட்டோக்கள், முகவரி, இமெயில் முகவரி, வங்கி தகவல்கள், செல்போன் எண் போன்றவற்றை நமக்கு தெரியாமலேயே எடுத்து வருகின்றனர்.