பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், அவரது சளி மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே பரவிய வைரசை விட அதிக வீரியமிக்கதாக உருமாறி, 70 சதவீதம் வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் இடையிலான விமான சேவையை ரத்து செய்தன. தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் , ‘’பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர், வீட்டு தனிமையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றிப்பட்டுள்ளார். அவரது சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சளி ஆய்வு பிறகே வீரியமிக்க கொரோனாவா அல்லது வீரியமில்லாத கொரோனாவா என தெரிய வரும். பிரிட்டனில் பரவி வரும், கொரோனா குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ’’கடந்த 10 நாட்களில், பல நாடுகளில் இருந்து பிரிட்டன் வழியாக வந்த 1088 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். தமிழக அரசின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கொரோனா பற்றி, மக்கள் அச்சப்பட தேவையில்லை. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’’ என அவர் தெரிவித்துள்ளார்.