தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் யானைகளுக்கு நடத்தப்படும், புத்துணர்வு முகாம், இதோ இந்த ஆண்டும் கடந்த ஞாயிறன்று துவங்கிவிட்டது. இருக்கட்டும்! ஜெயலலிதாவுக்கு யானைகள் என்றால் அதிக விருப்பமென்பது இந்தியா அறிந்த சுவாரஸ்யம். எந்த அளவுக்கு அவற்றின் மீது பிரியம் என்றால், முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அவர் சென்றிருந்த போது யானைக்குட்டி ஒன்றுக்கு கரும்பு கொடுக்க முயல, அது மிரண்டு அவரை முட்டுவது போல் நெருக்கிக் கொண்டு வந்துவிட்டது, சற்றே தடுமாறி திணறிவிட்டார் ஜெயலலிதா. அந்த சம்பவத்துக்குப் பிறகும் கூட யானைகள் மீதான அவரது பிரியம் குறைந்ததில்லை. 
இந்த நிலையில், கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் ஒன்றை நடத்தினார். 

ஒரு மண்டலம்! அதாவது 48 நாட்கள் இந்த முகாம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இந்த முதல் முகாம் நடத்தப்பட்டது. கணபதி ஹோமத்துடன் துவங்கி 48 நாட்கள் அமர்க்களமாக நடந்த இந்த முகாமில் யானைகளுக்கு  தினமும் மிக ஆகாரமான உணவுகள், புத்துணர்வு தீனிகள், சிறந்த மருத்துவ கவனிப்பு ஆகியன அளிக்கப்பட்டன. 
ஆனால் இந்த முகாமை வன உயிரின ஆர்வலர்கள் வன்மையாக எதிர்த்தனர். அதற்கு இரண்டு காரணங்கள்! ஒன்று, கோயில் யானைகள் பாகன்களோடு நெருங்கிப் பழகி, செயற்கையான உணவுகளை உண்டு, மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் வலம் வருவதால் அவற்றுக்கு நோய் தொற்று இருக்கும். புத்துணர்வு முகாமின் போது இந்த யானைகள் முதுமலையில் உள்ள மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டன. அப்போது இந்த யானைகளிடம் உள்ள நோய்க்கிருமிகள், ஆற்றில் கலந்துவிடும். அதே மாயாற்று நீரை நம்பித்தான் முதுமலை வனத்தின் காட்டு உயிரினங்கள் உள்ளன. அவை அந்த நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யும் போது ஆந்த்ராக்‌ஸ் உள்ளிட்ட பல வகையான நோய்கள் பரவுது சாத்தியம்! என்பதே. இந்தியாவில் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான முதுமலை வனம் இந்த பிரச்னையால் சிதைந்துவிடக்கூடாது! என்பதே வன உயிரின ஆர்வலர்களின் எண்ணம். 

இரண்டாவது காரணம்: தரைப்பகுதியிலிருந்து நீலகிரி மலைக்கு லாரிகளில் இந்த யானைகளை அழைத்துச் செல்வது பெரிய ரிஸ்காக இருந்தது.  மிரளும் யானைகள் சற்றே குறும்பு செய்து ஆடியதால் லாரிகள் ஏற, இறங்க சிரமப்பட்டன. எங்காவது லாரி கவிழுந்துவிட்டால் யானையின் உயிருக்கு உத்திரவாதமில்லை! லாரியில் செல்லும் மனிதர்களுக்கும் ஆபத்தே.இந்த விஷயம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போனது. உடனே முதற் காரணத்துக்காக இல்லாவிட்டாலும், லாரி கவிழ்ந்து கோயில் யானைக்கு ஏதாவது ஆகிவிட்டால், அது தன் ஆட்சிக்கான அபசகுமனாகிவிடும்! என்று பயந்தாராம் ஜெ., அதன் பின் இந்த முகாமானது மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. அதுவும் பவானி ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டு, முகாம் யானைகள் ஆற்றில் குளிக்கவைக்கப்பட்டன. இந்த பவானி ஆறு செல்லும் வழியிலும் வனம் உள்ளது பல நூறு காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அந்நீரை பருகுமென்பதால் இந்த முறையும் வன உயிரின ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் ‘கரூரில் இருந்து திருச்சி செல்லும் பாதையில் உள்ள முக்கொம்புவில், காவிரி ஆற்றின் கரையில் இந்த முகாமை நடத்துங்கள். ஏனென்றால், அதற்குப் பிறகு எந்த வனத்தினுள்ளும் காவிரி நீர் பாயாமல் ஓடி கடலில்தான் கலக்கிறது. எனவே வன உயிரினங்களுக்கு பாதிப்பு வாய்ப்பே இல்லை!’ என்றனர். ஆனால் அரசோ இதை எல்லாம் ஏற்காமல் பெப்பே காட்டிவிட்டு, இதோ தொடர்ந்து தேக்கம்பட்டியில்தான் நடத்தி வருகிறது. எனவே வன உயிரின ஆர்வலர்கள் ’கத்திக் கதறி பயனில்லை’ என்று ஓய்ந்து உட்கார்ந்துவிட்டனர். பிரச்னை அத்தோடு ஓய்ந்துவிட்டதா? என்றால் அதுதான் இல்லை. இந்த தேக்கம்பட்டியில் முகாமை நடத்திட, அப்பகுதியை சுற்றியிருக்கும் பல கிராமத்தினர் வருடா வருடம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன்? என்றால்....

தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடத்தப்படும் இடத்திலிருந்து வெறும் பத்து, இருபது அடிகள் தள்ளி, நேர் எதிரே  நெல்லி மலை என்றொரு மலைப்பகுதி உள்ளது. இதில் காட்டு யானைகள் உலா வருகின்றன. அவை தண்ணீர் குடிப்பதற்காக, முகாம் நடத்தப்படும் பவானி ஆற்றின் பகுதிக்குதான் வழக்கமாக இறங்கி வரும். ஆனால் வருடா வருடம் முகாம் நடத்தும் 48 நாட்களும், அதற்கு முன்னும் பின்னுமாக ஏற்பாடு மற்றும் காலி செய்யும் பணிகளென சுமார் இரண்டு மாதங்கள் பணியாளர்களின் நடமாட்டம், வேலைகள் நடப்பதால் காட்டு யானைகளால் இங்கே தண்ணீர் குடிக்க முடிவதில்லை. எனவே அவை நீரை தேடி அப்படியே தள்ளிப்போய் கிராமப்புறங்களில் இறங்கிவிடுகின்றன. இரவில் போனோம் தண்ணீரை குடிச்சுட்டு காட்டுக்கு திரும்பினோம் என்றில்லாமல், ஆன் தி வேயில் கிராமத்தினர் போட்டிருக்கும் தோட்டங்களில் பயிரை சூறையாடி தின்பது, அதிகாலையில் வண்டியில் கடக்கும் பால்காரர்களை தூக்கிப்போட்டு மிதிப்பது என்று வேலைகளை காட்டுகின்றன. பதிலுக்கு கிராமத்தினரும், வனத்துறையினரும் பட்டாசுகளை எடுத்து வீச, பாவம் இந்த காட்டு யானைகள் அரண்டு மிரள்கின்றன. ஆக மனித -  யானை மோதல் நடந்து இரு பக்கமும் சேதாரமாகிறது. அதிலும் மனிதனுக்கு உயிர்கள் மற்றும் பயிர்கள் சேதமோ அதிகம். 

மேலும் கிராமங்களில் உள்ள சுவையான பயிர்களை தின்று பழகிவிட்ட காட்டு யானைகள், அதன் பின் முகாம் முடிந்து பல மாதங்களானாலும் கூட அந்தப் பக்கம் போகாமல் கிராமங்களையே சுற்றுவது வாடிக்கையாகி இருக்கிறது. இதனால், இந்த முகாம் இங்கே நடத்தப்பட துவங்கியதிலிருந்து வருடம் முழுக்க காட்டு யானை பயத்திலேயே மக்கள் வாழ வேண்டியதாகி இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இன்னொரு விவகாரமும் விஸ்வரூபமாக இருக்கிறது. அது, முகாமில் உள்ள பெண் யானைகளை தேடி, காட்டு ஆண் யானைகள் ‘இணை சேர’ வருவதுதான். அதாவது யானைகள் குறிப்பிட்ட இடைவெளியில் ‘ஹீட்’ என்று சொல்லப்படும் இணைசேரும் தயார் நிலைக்கு வரும். இந்த சமயங்களில் அவை கட்டுக்கு அடங்காது செயல்படும். அவற்றின் விழிகளுக்கு மேல் பகுதியில் இருந்து மத நீர் சுரந்து வழியும்.  இடஹி ‘மஸ்த்து காலம்’ என்பார்கள். இந்த சமயங்களில் வளர்ப்பு யானைகளையே கட்டுப்படுத்துவது மிக கஷ்டம். எனவே மஸ்து தனியும் வரை மரங்களில், காலில் சங்கிலிபோட்டு கட்டிப்போட்டுவிடுவர். பாகன்களே அதன் அருகில் போகாமல், எட்டி நின்றுதான் தீனி போடுவர். 

அப்படியானால் காட்டு யானைகளுக்கு மஸ்த்து பிடித்தால் எப்படி ஆக்ரோஷமாக இருக்குமென நினைத்துப் பாருங்கள்! முகாமில் இருக்கும் பெண் யானை ஏதாவது ஹீட்டுக்கு வந்தால், அதை அருகிலிருக்கும் வனம் மற்றும் நெல்லி மலைப்பகுதியில் திரியும் ஆண் யானைகள் வாசனை மூலம் கண்டறிந்துவிடும். உடனே இணை சேர்வதற்காக முகாமை நோக்கி வரும். இப்படி வரும் ஆண் யானைகளை தடுப்பதும், விரட்டுவதும் பெரும் சிரமம். இரண்டு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. காட்டு ஆண் யானை ஒன்று, ஹீட்டிலிருந்த முகாம் பெண் யானையுடன் இணைவதற்காக பவானி ஆற்றினில் இறங்கி, இரவில் முகாமின் வேலியை  உடைத்துக் கொண்டு நுழைய, பெண் யானைகள் பிளிற, பாகன்கள் அலறியடித்துக் கொண்டு ஓட, வனத்துறையினர் படாதபாடு பட்டு அந்த காட்டு ஹீரோவை விரட்டினார்கள். 
அதன் பின் அந்த முகாம் முடியும் வரை ஒவ்வொரு நாள் இரவும் பயத்தோடுதான் கழிந்தது. அதன் பின் ஒவ்வொரு வருடம் முகாம் நடக்கும்போதும் அப்பயம் இருக்கிறது. 
இதோ இந்த வருடத்துக்கான முகாம் துவங்கிவிட்ட நிலையில், இப்போதும் ஒவ்வொரு இரவையும் பயத்தோடுதான் கழிக்கின்றனர் பாகன்கள்! ஏனெனில் முகாமில் இருக்கும் 28 யானைகளும் பெண் யானைகளே! என்பதால் தான்.