கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்தவர். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டார்.

தற்போது இவர் ‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகிக்கிறார்.  இந்த நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும். ஆல்பபெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரிபேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த தலைமை செயல் அதிகாரி பதவியை விட்டு விலகியதால் அந்த பதவியை சுந்தர்பிச்சை ஏற்றார்.

தற்போது அவர் ‘ஆல்பபெட்’ மற்றும் ‘கூகுள் ’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். எனவே சுந்தர் பிச்சை ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெறுகிறார். வருகிற 2020- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

மேலும் இவர் நேற்று முன்தினம் ரூ.639 கோடி (120மில்லியன் டாலர்) பங்கு தொகை பெற்றார். இதற்கு முன்பு 2 தடவை தலா ரூ.852 கோடி (120 மில்லியன் டாலர்) மற்றும் ரூ.214 கோடி (30 மில்லியன் டாலர்) பங்கு தொகையை பெற்று இருக்கிறார்.

சுந்தர்பிச்சை கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோமை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் ‘பாப்புலர்’ ஆனது.

அதைத்தொடர்ந்து தனது கடின உழைப்பால் 2015-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2017-ம் ஆண்டில் ஆல்பபெட் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..