லட்சக்கணக்கில் வருமானம் இருந்தும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடும் ஸ்ரீதர் வேம்பு, என்ன காரணம் தெரியுமா?
பழையசோறுதான் தனது நோய்க்கு மருந்தாக மாறியுள்ளதாக சோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த தொழிலதிபரும், சோஹோ நிறுவனத்தின் தலைவருமான ஸ்ரீதர் வேம்பு, தன்னுடைய நோய்க்கு பழைய சோறு மருந்தாகியுள்ளதாகக் கூறியுள்ளார். பணக்காரராக இருந்தபோதிலும் அவர் இதை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது கவனம் ஈர்த்துள்ளது. இவர்பல காலமாக இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) அவதிப்பட்டு வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக இவர் தன் உணவுப்பழக்கத்தை மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"சில வருடகாலமாக என் காலை உணவாக பழைய சோறு மாறியுள்ளது. எனது பாம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்துவருகிறேன். எனக்கு பல காலமாக எரிச்சலுடன் கூடிய குடல் பிரச்னை (Irritable bowel syndrome) இருந்தது. இந்த நோய் தற்போது பூரணமாக குணமடைந்துவிட்டது. அத்துடன் ஒவ்வாமைகளும் இருந்தன. அவைகளும் இல்லாமல் போனது. ஒருவேளை இந்த பதிவு சிலருக்கு உதவும்"எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவுக்கு வரவேற்பு பெருகிவருகிறது. இந்நோய் பாதிப்புள்ள பலரும், ஸ்ரீதர் வேம்புவிற்கு நன்றி தெரிவித்துவருகின்றனர். சிலர், பழைய சோறு ரெசிபி கேட்டு கருத்து பதிவிடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக சிலர் அது குறித்த விடியோக்களை இணைத்துள்ளனர்.
இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம்
இந்த நோய் நமது வயிற்றின் குடல் பகுதியில் ஏற்படும். இதனால் சிலருக்கு பதற்றம், கோபம், மன அழுத்தம் ஆகிய சில உணர்வுரீதியான மாற்றங்கள் ஏற்படும்போது, அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சாப்பிட்டதும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு போன்றவை உடனடியாக வரும். மனநிலைதான் இதற்கு காரணம் என்பதால் இதனை சாதாரணமாக விடக் கூடாது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியில் எந்த மலர்களால் சிவபெருமானை வழிபட்டால், ஜென்ம பாவம் நீங்கி முழுப்பலன் கிடைக்கும்?
இந்த நோய் யாருக்கு ஏற்படும் என குறிப்பிட்டு கூறமுடியாது. ஆனால் தொடர்ந்து பயந்து கொண்டே இருப்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த நோய் தாக்கம் வர வயது வரம்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நிச்சயம் சந்திக்க வேண்டும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். பலரும் இந்த நோய் குறித்து சொல்ல கூச்சப்படும் நிலையில், பழைய சோறு இந்த நோய்க்கு மருந்தாக செயல்படுவதாக ஸ்ரீதர் வேம்பு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
பழைய சோறு நன்மைகள்
பழைய சோற்றைச் சாப்பிடும்போது நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து முழுமையாக கிடைக்கும். பழைய சோற்றில் லாக்டோபேசிலஸ் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகிறது. பல வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் மிகுந்து காணப்படுகிறது. இது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் நோய்க்கு நல்ல மருந்தாக செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இரவு முழுக்க பாலில் ஊறிய முந்திரியை சாப்பிட்டு வந்தால்..கிடைக்கும் அற்புத பலன்கள் தெரியுமா?