மழைக்காலம் வந்தாலே, டெங்கு மற்றும் மற்ற காய்ச்சல்கள் வந்துவிடுமோ என்ற பயம் தொற்றிக்கொள்ளும். கொசுக்கள் பயங்கரமானவை. கொசுக்களின் மூலம் தான் டெங்கு மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

திடீரென தோன்றும் அறிகுறிகளான,106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு  காய்ச்சல், தடித்து காணப்படும் லிம்ப்னோடு, வாந்தி, மயக்கம், மூட்டு வலி, உடல் முழுக்க அசதி ஆகியவை ஏற்படும். 

சில சமயத்தில் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த கசிவு ஏற்பட்டு மரணம் கூட ஏற்படலாம். டெங்கு காய்ச்சலுக்கு என நேரடியாக எந்த மருந்தும் கிடையாது. ஆனால் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உடல் வலியை குறைக்கவும், அதற்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

அதே போன்று, உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிபிப்பது முதல் பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம்.ரத்த தட்டணுக்கள் குறைந்து ரத்த கசிவு ஏற்பட்டால், இது போன்ற சமயத்தில் ப்ரூபின், ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இது போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது ரத்த கசிவு அதிகமாக ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தக்க சமயத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 

ஒரு சிலருக்கு டெங்கு வந்ததற்கான எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லாமல் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் ரத்த கசிவுடன் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதில் முக்கியமாக 12 வயதிற்குட்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கூடுதலாக பாதிப்பு இருக்கக்கூடும். 

டெங்கு காய்ச்சல் நம்மை அண்டாமல் முன்னெச்சரிக்கையுடன் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, முக்கியமாக செய்ய வேண்டியது, கொசுக்களிடமிருந்து காத்துக்கொள்வதுதான். வீட்டின் எந்த இடத்திலும் தண்ணீரை தேங்கவிடக்கூடாது, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், கொசுக்கள் வீட்டிற்குள் வராத அளவிற்கு, ஜன்னல்களை கொசுவலையால் மூட வேண்டும். இவற்றையெல்லாம் செய்து கொசுக்களிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.