மன அழுத்தமில்லாமல் வீட்டை சுத்தம் செய்வதற்கான சில எளிய உத்திகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், தொற்று நோய்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். மேலும் வீட்டை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆனால், வீட்டை சுத்தமாக வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில நேரங்களில் அது ஒரு மிகப்பெரிய பணியாக கூட உணரலாம். குறிப்பாக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும் போது.

இருப்பினும், சரியான மனநிலை மற்றும் உத்திகள் இருக்கும் போது குப்பையாக இருக்கும் வீட்டை கூட சில நிமிடங்களில் மிகவும் எளிதாக சுத்தமாக்கிவிடலாம். எனவே, மன அழுத்தம் இல்லாமல் உங்களது வீட்டை சுலபமாக சுத்தம் செய்வதற்கான சில உத்திகள் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி உங்களது வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுங்கள்.

வீட்டை சுத்தமாக வைப்பதற்கான சிம்பிள் டிப்ஸ்கள் ;

1. குப்பைகளை அப்புறப்படுத்துங்கள் :

- உங்களது வீட்டை சுத்தப்படுத்துவதற்கான முதல் படி குப்பைகளை அகற்றுவதாகும். இதற்கு உங்களது வீட்டில் இருக்கும் தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத பொருட்களை அற்றிவிடுங்கள்.

- அதுபோல குப்பைகளை குவிய விடாதீர்கள். எனவே அவ்வப்போது குப்பைகளை அகற்றி விடுங்கள். சிறிய குப்பைகளை கூட அகற்றுவதன் மூலம் குப்பைகள் குவிவதை தடுக்கலாம் மற்றும் உங்களது வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கலாம்.

- பொருட்களை அடுக்கி வைப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிவையுங்கள். இதனால் உங்கள் வீடு சுத்தமாகவும், பார்ப்பதற்கு ரொம்பவே அழகாகவும் இருக்கும்.

2. சுத்தம் செய்யும் வழக்கங்கள் :

- சுத்தம் செய்வதற்கனே ஒரு அட்டவணையை உருவாக்கி அதை கடைப்பிடித்து வந்தால் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். மேலும் மன அழுத்தம் இல்லாமலும் உணரலாம்.

- வீட்டு வேலைகளை தினசரி வாராந்திர மற்றும் மாதாந்திர பணியாக பிரித்து அவற்றை பின்பற்றுங்கள். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்தல், துடைத்தல், துணி துவைத்தால் போன்ற பணிகளை இந்த நாளில் செய்ய வேண்டுமென ஒதுக்குங்கள். இப்படி நீங்கள் வேலைகளை சிறிய பகுதிகளாக பிரிப்பதன் மூலம், உங்களது வேலைப்பளு இலகுவாகும் மற்றும் நேரமும் மிச்சமாகும்.

3. ஸ்மார்ட் ஸ்டோரேஜ் தீர்வு :

பொதுவாக பலரது வீடுகளில் பொருட்கள் வைத்த இடத்தில் இருக்காது. இதனால் பார்ப்பதற்கு குப்பையாகவே இருக்கும். பிறகு தேவைப்படும் பொருளைத் தேடும் போது அந்த இடத்தில் இல்லை என்றால் எரிச்சலும், கோபமும் தான் வரும். மேலும் சில சமயங்களில் வீட்டில் சண்டை கூட வரும். முக்கியமாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட முகம் சுளிக்க தோன்றும். இத்தகைய சூழ்நிலையில், இடத்தை அதிகரிக்கவும், குப்பைகளை குறைக்கவும், கூடைகள், தொட்டிகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். வகைவகாரியாக பொருட்களை ஒருங்கமைத்தால், உங்களுக்கு தேவைப்படும் போது எளிதாக கண்டுபிடிக்கலாம். மேலும் பயன்பாட்டிற்கு பிறகு பொருட்களை எடுத்த இடத்தில் மீண்டும் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் வீடும் பார்ப்பதற்கு அழகாககவும் இருக்கும்.

4. முழு குடும்பத்தையும் ஈடுபடுத்து:

பெரும்பாலான வீடுகளில் வீட்டை சுத்தம் செய்வது அம்மாவின் கடமை என்று நினைப்பார்கள். ஆனால் அது தவறு. வீட்டை சுத்தம் செய்வது அம்மாவின் பொறுப்பு மட்டும் கிடையாது. மேலும் வீட்டை சுத்தம் செய்வது ஒருவரின் தோளில் மட்டும் விழுந்தால் அது அந்த நபருக்கு மன அழுத்தத்தை தான் ஏற்படுத்தும். எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள முழு குடும்பமாக செயல்பட வேண்டும். இதற்கு குடும்பத்தில் இருப்பவரின் வயதிற்கு ஏற்ற பணிகளை ஒதுக்கி அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டை சுத்தம் செய்தால் வீடு சுத்தமாக இருக்கும். முக்கியமாக அம்மாவின் பணி சுமையும் குறையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒத்துழைப்பு உணர்வும் வரும்.

ஆகவே, மேலே சொன்ன உத்திகளை பின்பற்றி உடனே உங்களது வீட்டை குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.