நடிகர் ரஜினிக்கு சம்மன்...! பதறும் ரசிகர்கள்...! 

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக  நடந்த போராட்டத்தின் போது ரஜினி தெரிவித்த கருத்துக்கு  எதிராக பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஓய்வு பெற்றநீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்து உள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் இது குறித்து பல கட்ட விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்  தெரிவித்தார் ரஜினி 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "இது போன்று போராட்டம் நடந்தால் நாடே  சுடுகாடாகிடும் என குறிப்பிட்டார். மேலும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் பெரும்  எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 25-ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.