அப்பூப்பந்தாடி தெரியுமா? சுற்றுலா ஏஜென்சி தொடங்கி சாதித்த சஜ்னாவின் கதை
கேரளாவைச் சேர்ந்த சஜ்னா அலி 2014ஆம் ஆண்டு தொடங்கிய தனது சுற்றுலா நிறுவனத்தின் மூலம் சுமார் 400 பயணங்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண் சஜ்னா அலி. இவர் 2014ஆம் ஆண்டு தனது தோழிகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து ஒடிசா வரை சுற்றுலா செல்ல விரும்பினார். ஆனால், கடைசி நேரத்தில் அவருடன் வரவிருந்த தோழிகள் அனைவரும் பயணத்தை ரத்து செய்துவிட்டனர். இதனால் மனம் சோர்ந்து போகாத சஜ்னா தனியாகவே அந்தப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு திரும்பினார்.
இந்தப் பயண அனுபவத்தினால் ஊக்கம் பெற்று சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் சஜ்னா. இப்போது அந்த நிறுவனம் 398 பயணங்களை நிறைவு செய்துவிட்டது. விரைவில் நிகழ இருக்கும் 400வது பயணம் சஜ்னாவின் டிராவல் ஏஜென்சி ஏற்பாடு செய்யும் முதல் வெளிநாட்டுப் பயணமாகவும் அமைய உள்ளது.
அப்பூப்பந்தாடி (Appooppanthaadi) என்று தனது நிறுவனத்துக்குப் பெயர் வைத்துள்ளார் சஜ்னா. அப்பூப்பந்தாடி என்பது கேரளாவில் அதிகம் காணப்படும் மலை எருக்குப் பூவைக் குறிக்கும்.
36 வயதான சஜ்னா, இரண்டு மாத பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இவரது நிறுவனத்தின் மூலம் இதுவரை 4,300 பெண்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ரோஸ்மாலாவுக்கு எட்டு பெண்களுடன் சென்றதுதான் சஜ்னாவின் முதல் பயணம்.
வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!! அதுவும் எதில் கலந்து கொடுத்தார் தெரியுமா?
"அந்தப் பயணத்தின் வேடிக்கையான பகுதிகளை நான் சமூக ஊடகங்களில் பதிவு செய்தேன், அதைப்பற்றி பலர் விசாரித்தனர். அப்போதுதான் இந்தப் பயண நிறுவனத்தை தொடங்க இது சரியான நேரம் என்று நினைத்தேன்" என நினைவுகூர்கிறார் சஜ்னா.
“நான் கோழிக்கோட்டைச் சேர்ந்தவள். என் தந்தை ஒரு டிரக் டிரைவர். ஒவ்வொரு பயணத்தின்போதும் வீட்டிற்கு புகைப்படங்கள் எடுத்து வருவார். அதையெல்லாம் பார்த்துவிட்டு நானும் அவருடன் செல்ல விரும்பினேன். ஆனால் பெண்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால், நீண்ட பயணங்களின்போது நான் அவருடன் வருவதைத் தடுத்தார். இருந்தாலும் அவர் என்னை குறுகிய ஒரு நாள் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார். நான் அவற்றை மிகவும் ரசித்தேன்”என்றும் சஜ்னா கூறுகிறார்.
மென்பொருள் நிபுணரான சஜ்னா திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபார்க்கில் தனது வேலையை விட்டுவிட்டு பயணத்தின் மீதான தனது ஆர்வத்தால் டிராவல் ஏஜென்சி ஆரம்பித்தார்.
தன்பாலின திருமணம் பற்றி நாடாளுமன்றம் முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
'சமூகத்திற்குத் திரும்பக் கொடுங்கள்' என்ற பெயரில் ஒரு கிராமத்தில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கான சிறப்புப் பயணங்களையும் சஜ்னா தன் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்கிறார். இதில் கலந்துகொள்ளும் அனைவரும் தன்னார்வத்துடன் கிராம மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கின்றனர்.
கேரள மாநில அரசின் 'பொறுப்புணர்வுள்ள சுற்றுலா' என்ற இயக்கத்தில் அப்பூப்பந்தாடி நிறுவனமும் இணைந்துள்ளது. இதுமட்டுமின்றி 'பிரயாணா' என்ற திட்டம் மூலம் சுற்றுலா ஆர்வலர்களுக்கு அவர்களுடைய இரண்டு நாள் பயணத்துக்கு அப்பூப்பந்தாடி நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் பயணம் குறித்து ஆன்லைனில் போட்டோ, வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும்.
ஏஜென்சியின் ஃபேஸ்புக் குழுவில் 11,000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ளனர். தலா 300 உறுப்பினர்களைக் கொண்ட 22 வாட்ஸ்அப் குழுக்களும் உள்ளன. பயணத் திட்டங்களை விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களையே பயன்படுத்துகிறார். “பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அவர்களை வலுவூட்டுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் எங்களுடன் தொடர்ந்து பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்" என்கிறார் சஜ்னா அலி.
பல் பிடுங்கிய விவகாரத்தில் சூர்யா பிறழ் சாட்சி கூறியது ஏன்? தாத்தா பூதப்பாண்டி விளக்கம்