அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பட பாடலுக்கும் ரசிகை ஒருவர், நடனம் ஆடும் வீடியோவானது 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கூட படத்தின் நல்ல ஓப்பனிங்குக்குக் காரணமாகியுள்ள, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படம் திரைக்கு வந்து பல நாட்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.
இப்படத்திலுள்ள 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானது. இந்த பாடல்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர். சமீபத்தில் கூட விமான பணிப்பெண் ஒருவர் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் தற்போது 'புஷ்பா' பட பாடலுக்கு நடனமாடும் ஒரு நடன கலைஞரின் வீடியோவும், சிறுமி ஒருவரின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர் ம்ரினாலி கிரண் என்பவர் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை, இவர் அல்லு அர்ஜுன் அணிந்திருக்கும் உடை போலவே அணிந்துகொண்டு 'புஷ்பா' (Pushpa) படத்தின் 'சாமி சாமி' பாடலுக்கு சற்றும் மாறாமல் அவரை போலவே அச்சு அசலாக நடமாடுகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் “என்னுடைய பேவரைட் @alluarjunonline சாரின் நடன சேலஞ்சை நான் எப்படி ஏற்காமல் இருப்பேன். அவரை போல் நான் நடனமாடிய இந்த வீடியோவை நான் இதுவரை 30-40 முறைக்கு மேல் பார்த்துள்ளேன்" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. இதில் பலரும் நேர்மறையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு பயனர் நானும் இந்த வீடியோவில் உங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார், மேலும் சிலர் இதய எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பெண்ணின் வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஒரு சிறுமியின் நடன வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. tania_and_sony என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஒரு சிறுமி 'புஷ்பா' படத்தின் 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு நடனமாடுகிறார்.
அந்த சிறுமியின் பின்புறம் உள்ள டிவியில் ஸ்ரீவல்லி பாடல் ஓடுகிறது, அதில் அல்லு அர்ஜுன் போலவே உடை அணிந்துகொண்டு அந்த சிறுமியும் நடனமாடுகிறார். சிறுமியின் இந்த கியூட்டான வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த வீடியோ இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பலரும் சிறுமியின் நடனத்தை பாராட்டி நல்லவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதே போன்று, புஷ்பா திரைப்படத்தின் மற்றுமொரு ''ஊ சொல்றியா மாமா" பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிக வரவேற்ப்பையும், அதே நேரத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள 'புஷ்பா' படத்தின் தமிழ் வெர்ஷனில் விவேகாவால் எழுதப்பட்டு, ஆண்ட்ரியாவின் வசீகரமான குரலில் வெளிவந்து கேட்பவரை சற்று கிறங்க வைத்தது இந்தப் பாடல். பலர் கிறங்க சிலரோ கோபப்பட்டுள்ளனர். கோபத்திற்குக் காரணம், 'சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ, டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க, ஆச வந்தா சுத்தி சுத்திஅலையா அலையும் ஆம்பள புத்தி' போன்ற வரிகளே. ஆண்களை மிகவும் தரம் தாழ்த்தும் விதமாக இவ்வரிகள் அமைந்திருப்பதாக சினம் கொண்டுள்ளது ஒரு தரப்பு. எது எப்படி இருந்தாலும் புஷ்பா படத்திற்கு இன்னும் மவுஸு குறையவில்லை என்பது தான் உண்மை.
