கர்ப்பிணி பெண்கள் எந்த அளவுக்கு மனநலம், உடல் தூய்மை ஆகியவற்றை பராமரிக்க வேண்டுமோ, அதைவிட சிறந்த முறையில் உணவு பழக்கவழக்கத்தை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

சாதாரண காலங்களில் குறிப்பிட்ட அளவு சாப்பிடும் பெண்கள், குழந்தையை வயிற்றில் சுமக்கும்போது, மருத்துவரின் உரிய ஆலோசனையின்பேரில், மினரல், விட்டமின், தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, தேவையான கலோரிகளை உடலுக்கு மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தர வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி தாய்மார்கள் என்னென்ன சாப்பிடலாம்?

1.   இட்லி, தோசை, சப்பாத்தி, ஓட்ஸ், சம்பா கோதுமை ரவா உப்புமா ஆகியவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

2.   சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றையும் காலையில் சாப்பிடலாம்.

3.   மாலை வேளையில் பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என ஏதாவது ஒரு முளைகட்டிய தானியத்தை, அரை வேக்காடாக செய்து சாப்பிடலாம்.

4.   எள் உருண்டையில் இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை இருப்பதால், ஆறாவது மாதத்தில் இருந்து சாப்பிடலாம்.

5.   கர்ப்பிணி பெண்கள் பால், காபி ஆகியவற்றில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து, மோர், வெள்ளரி, மாங்காய், காய்கறி சூப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

6.   கர்ப்பக் காலத்தில் உடலில் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

7.   கர்ப்பிணிகள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி தண்ணீர் குடிப்பது போர் அடித்தால், மோர், தயிர், இளநீர் ஆகியவற்றை பருகலாம். ஆனால், தண்ணீர் குடித்தால், குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

கர்ப்பிணிகள் எதை சாப்பிடக் கூடாது?

1.   எண்ணெய் பதார்த்தங்களை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். எப்போதும் குறைந்த அளவிலேயே எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.   மதிய நேர உணவில் கட்டாயம் தேங்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவு நேரத்தில் கீரை, ஆம்ப்லெட் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

3.   குளிர்பானங்கள், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீத்தாப்பழம், வாழைப்பழம், கேரட், பீட்ரூட், வாழைக்காய் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

4.   அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரட், பூரி, புரோட்டா, சேமியா, பொங்கல், கிழங்கு ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

5.   ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். 35 வயதுக்கு குறைவானவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், அனைத்து வயதினரும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.