சிமெண்ட் வாட்டர் டேங்க் அல்லது பிளாஸ்டிக் டேங்க் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை இங்கு காணலாம்.
இந்த காலகட்டத்தில் வாட்டர் டேங்க் இல்லாத வீடுகள் அரிதிலும் அரிதாகிவிட்டது. எல்லோர் வீட்டு மாடியிலும் ஒரு வெள்ளை அல்லது கருப்பு வாட்டர் டேங்க் இருக்கும். முந்தைய காலத்தில் சிமெண்டில் தான் தண்ணீர் தொட்டிகளை கட்டுவார்கள். இப்போது பிளாஸ்டிக் டேங்குகள் பெருகிவிட்டன. இந்த இரண்டுக்கும் சில நன்மை தீமைகள் உள்ளன. இதில் எதை வீட்டில் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக கான்கிரீட் தொட்டிகள் நீண்ட காலம் வரை எந்த சேதாரமும் இல்லாமல் இருக்கும். பயங்கர வெப்பநிலையைக் கூட தாங்கி கொள்ளும். பிளாஸ்டிக் தொட்டிகள் அப்படியல்ல. கொஞ்சம் இலகுவானவை. ஆனால் இதை பராமரிக்க அதிகம் மெனக்கெட தேவையில்லை. குறைந்த செலவில் தொட்டி அமைக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் தொட்டிதான். ஆனால் சிறந்தது என வந்துவிட்டால் அவற்றின் நன்மை, தீமைகளை ஆராய வேண்டுமல்லவா? வாங்க பார்க்கலாம்.
சிமெண்ட் டேங்க்:
சிமெண்ட் டேங்க் வலிமையாக வடிவமைக்கப்படும். ரொம்ப காலம் பயன்படுத்த முடியும். வெயிலுக்கும் மழைக்கும் பாதிப்பு ஏற்படாது. வெப்பநிலையை சீராக வைக்க உதவும். கோடைகாலத்தில குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் நீரை வைக்க உதவும். இந்த தண்ணீர் தொட்டியில் கொள்ளளவு அதிகம் இருக்கும். தொழிலுக்கும், விவசாயத்திற்கும் ஏற்றது. சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிப்படையாது. ஆனால் சிமெண்ட் தொட்டிகளில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. அதில் கசிவு, விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இடமாற்றம் செய்ய முடியாது. ஆனால் பிளாஸ்டிக் தொட்டிகளை நகர்த்த முடியும். அவை இலேசான கனம் கொண்டவை.
பிளாஸ்டிக் டேங்க:
இது எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக் கூடிய இலகுவான தொட்டிகள். குறைந்த செலவில் வைத்துவிடலாம். விரிசல் விழாது. துருப்பிடிக்காது. தேவைக்கு ஏற்றவாறு வடிவங்களில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இதில் சில பாதிப்புகள் உள்ளன. இந்த டேங்க்குகளில் புற ஊதா கதிர் பாதிப்பு , அதிக வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. சிமெண்ட் டேங்க் போல இவை வெப்பநிலையை சீராக வைத்திருக்காது. சிமெண்ட் டேங்கில் ஒப்பிட்டால் குறைந்த கால பயன்பாடு மட்டுமே.
எந்த வாட்டர் டேங்க் நல்லது?
ஒவ்வொரு தொட்டியும் அதற்கேற்ற நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ளன. தேவையை பொறுத்தும் உங்களுக்கு ஏற்ற செலவுகளின் அடிப்படையிலும் தொட்டியை ஏற்படுத்தலாம். மேலே சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யுங்கள்.
