"திருந்த" இதுதான் சரியான நேரம்..! பொது வெளியில் இப்படி நடந்துகொண்டால் எச்சரியுங்கள் மக்களே..! 

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவில் வந்துள்ளது. தற்போது வரை 28 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய மக்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதில் குறிப்பாக பொது இடங்களில் அதிகமாக கூட கூடாது. மற்றவர்களிடம் கை குலுக்கி பேசுவது தவிர்க்கப்படலாம். வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகம் கை கால்களை நன்கு கழுவி விட்டு பின்னரே நம் வீட்டு அறைக்குள் சென்று மற்றவர்களிடம் உரையாடலாம். தொட்டு பேசலாம்.

பொது வெளியில் செல்லும் போது நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல் நம்மால் மற்றவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அந்த வகையில் பொதுவெளியில் எச்சில் துப்புவது, சளி சிந்துவது, தும்பும்போது கர்ஷிப் இல்லாமல் மற்றவர்கள் மீது படும்படி தும்புவது இல்லாமல் இருந்தால் நல்லது. 

இது போன்ற விரும்பத்தகாத செயல்களை தவிர்த்தாலே நாமும் நன்றாக இருக்கலாம். மற்றவர்களையும் நிம்மதியாக வாழ வைக்கலாம் என்பதை புரிந்து கொண்டு சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது. 

அதே போன்று தினமும் குறைந்தது 5 முறையாவது சுத்தமாக கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பதை நம் வீட்டு உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் வெளியில் செல்லும்போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தெரிவித்து மற்றவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும் இவ்வாறு செய்து வந்தாலே நோய் பரவாமல் தடுக்க முடியும்.