நைஜீரியாவில் ஒரு பல்கலைக்கழகம் மாணவிகள் தேர்வு எழுத பிரா அணிவது கட்டாயம் என வினோத விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பிரா இல்லாவிட்டால் தேர்வில்லை: தேர்வு எழுதச் செல்லும்போது செயின், மோதிரம், மாலை போன்றவற்றைக் கழற்றச் சொல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு நாட்டில் தேர்வு எழுத வினோத விதி ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம், மாணவிகள் தேர்வு எழுத பிரா அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உடை விதிகளைப் பின்பற்றவே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வினோத விதி என்ன?
நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான ஒகூனில் உள்ள ஒலாபிசி ஒனபான்ஜோ பல்கலைக்கழகத்தில், பெண் ஊழியர்கள் மாணவிகளை சோதனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரா அணிந்த மாணவிகளை மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், வீடியோ வெளியானதையடுத்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த விதிக்கு எதிர்ப்பு மட்டுமல்ல, ஆதரவும் பெருகி வருகிறது. மாணவர் சங்கத் தலைவர் முயிஸ் ஒலான்ரெவாஜு, இந்த விதியை ஆதரித்து, "இது ஒரு உடை விதிமுறை. பெண்களுக்கு மரியாதைக்குரிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம். மாணவிகள் பல்கலைக்கழக விழுமியங்களை மதித்து உடை அணிய வேண்டும்" என்று கூறியுள்ளார். நைஜீரியா ஒரு முஸ்லிம் நாடாக இருப்பதால், பல கட்டுப்பாடுகள் உள்ளன.
என்னென்ன உடைகள் தடை?
ஒலாபிசி ஒனபான்ஜோ பல்கலைக்கழகத்தில் உடை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. எதிர் பாலினத்தவரை ஈர்க்கும் வகையிலான உடைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவிகள் பல்கலைக்கழகம் மீது வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை
மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், "மாணவிகள் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதற்காக பல்கலைக்கழகம் மீது வழக்குத் தொடரத் தயாராகி வருகின்றனர். சோதனை என்ற பெயரில் பெண்களின் உடலைத் தொடுவது குற்றம். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடை விதிகளைப் பின்பற்ற வேறு வழிகள் உள்ளன. ஆனால், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
