50 வயசு ஆனாலும் மறக்காத பள்ளிப் பருவக் காதல்! ஓடிப்போன ஜோடி போலீசில் தஞ்சம்!
பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்த இருவர் 35 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தபோது காதல் வயப்பட்டு கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவர் காதல் வயப்பட்டு கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானத்துள்ளனர். இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழாவில் நடந்துள்ளது. எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த இவர்கள் சமீபத்தில் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் பல வருடங்கள் கழித்துச் சந்தித்தனர். அப்போது பள்ளிப்பருவ நாட்களை நினைவுகூர்ந்த அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள மசூதியை அகற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
இரண்டு பேருக்குமே 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், 35 வருடங்கள் கழித்து மலர்ந்த தங்கள் காதலைக் கைவிட முடியாமல் மூன்று வாரங்கள் யோசனை செய்த அவர்கள், ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்தச் சூழலில் இரண்டு பேரின் குடும்பத்தினரும் அவர்களைக் காணவில்லை என்று இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள காவல்துறையில் புகார்களை அளித்தனர். காவல்துறையின் சைபர் பிரிவின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில், காணாமல் போன இருவரும் திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி வழியாக பயணம் செய்துள்ளனர் என்று தெரியவந்தது.
இதனையடுத்து மூவாட்டுபுழா காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். சனிக்கிழமை இருவரும் ஒன்றாக காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
5 வருசம் ஆச்சு! சம்மதத்துடன் உடலுறவு கொண்டது பலாத்காரம் ஆகாது: உயர்நீதிமன்றம் கருத்து