Labour Day History: நம் நாட்டில் 1923ஆம் ஆண்டு தான் முதல்முறையாக மே 1ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடினார்கள். 

May 1 - Labour Day 2023: தொழிலாளர் வர்க்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மே தினம் (may day) என்ற உழைப்பாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் ஆலைகளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக வேலை நேரம் தொடர்ந்தது. இதனால் தொழிலாளர்களின் உடலும், மனமும் சோர்வடைந்தது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 நேர பொழுதுபோக்கு என்ற நோக்கம் தான் பல போராட்டங்களாக உருவெடுத்து மே தின வரலாறாக உள்ளது. வாங்க தெரிந்து கொள்ளலாம். 

மே- 1 உழைப்பாளர் தினம் 

தொழிலாளர்கள் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்யப்பட்டு வந்த காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தின் பயனாக 8 மணி நேரம் பணி நேரமாக உறுதி செய்யப்பட்டது. இந்த போராட்டம் தான் உழைப்பாளர்கள் தினம் கொண்டாட பின்னணியாக அமைந்தது. இதனை தொழிலாளர்கள் தினம், உழைப்பாளர்கள் தினம் என்றும் சில நாட்டில் அழைக்கின்றனர். தொழிலாளர்களுடைய மகத்தான உழைப்பையும், அவர்களுக்கான உரிமைகளையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மே தினம் கொண்டாடப்படுகிறது. 

தொழிலாளர் தின நோக்கம்

தொழிலாளர்களுடைய உழைப்பை சுரண்டுவதற்கு எதிராகவும் அவர்களுடைய உழைப்பையும் முயற்சிகளையும் மதிக்கவும் சுரண்டலில் இருந்து அவர்களை தற்காப்பதுமே தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம். 

தொழிலாளர் தின வரலாறு

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து தான் தொழிலாளர் தினத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இது 8 மணி நேர பணி நேரத்தை வலியுறுத்தியது. அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் உழைப்பாளிகளின் உரிமைக்குரல் மே 1ஆம் தேதி தீவிரமாக ஒலித்தது. அதன் பலனாக தான் 8 மணி நேரம் வேலை நேரம் அமலுக்கு வந்தது என்பதால் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக முடிவு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: Migraine headache: மைக்ரேன் தலைவலி.. தாங்க முடியாத இந்த வலிக்கு.. இப்படி ஒரு உடனடி தீர்வு இருக்கா?

ஹேமார்க்கெட்டில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் காவல்துறையைச் சேர்ந்த ஏழு பேரும், போராட்டக் களத்தில் நின்ற நான்கு பேரும் கொல்லப்பட்டனர் என்பது வரலாற்றில் ரத்தத்தால் எழுதபட்டுள்ளது. நம் நாட்டில் 1923ஆம் ஆண்டு தான் முதல்முறையாக மே 1ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடினார்கள். அப்போதைய மதராஸில் இந்த விழா நடைபெற்றது. இதனை இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. 

தமிழ்நாட்டில் வேலை நேரம்

அண்மையில் தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவில் இந்த திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மசோவை நிறுத்திவைத்தார். தொழிலாளர் தினமான இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் இந்தாண்டு தொழிலாளர் தினம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இதையும் படிங்க: ஆண்டியும் அரசனாகும் சனி யோகம்.. இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. பண மழை கொட்டப் போகுது!!