மதுரையில் ரயிலில் நடந்த தீ விபத்து; இந்திய ரயில்வே புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!!
இந்திய ரயில்வே IRCTC மூலம் சிறப்பு தனிப் பெட்டிகள் மற்றும் ரயில்களில் கேட்டரிங் வசதிகள் முன்பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரையில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தனிப்பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் கருகி பத்து பேர் பலியாகி இருந்தனர். இதற்குக் காரணம் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் தங்களுடன் காஸ் சிலிண்டர் கொண்டு வந்து இருந்ததும், டீ வைக்கும்போது சிலிண்டர் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத்துடன், தனிப்பெட்டிகளை பதிவு செய்து பயணிக்கும் பெட்டிகளில் மற்றும் ரயிலில் எரியக் கூடிய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ரயில்வே பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்களில் திருமணத்திற்கு, கோவில்களுக்கு செல்வதற்கு என்று ஒரு பெட்டியை அல்லது மொத்த ரயிலையும் புக் செய்யும் வசதி இருக்கிறது. சுற்றுலாவுக்கும் இதுபோன்று புக் செய்து கொள்ளலாம். இந்தப் பயணம் நாட்டின் எந்த ரயில் நிறுத்தத்தில் இருந்தும் எந்த ரயில் நிறுத்தம் வரையிலும் செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''FTR (முழு கட்டண விகிதத்தில்) முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பெட்டிகள்/ரயில்களிலும் கேட்டரிங் வசதிகளை IRCTC ஏற்பாடு செய்யும். IRCTC மூலம் மட்டுமே, அத்தகைய சிறப்புப் பெட்டிகள்/ரயில்களை கேட்டரிங் வசதிகளுடன் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னை - திருப்பதி இடையே 15 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
முழு கட்டண விகிதத்தில் முழு ரயிலையும் முன்பதிவு செய்யும் பட்சத்தில், ஒரு பான்ட்ரி கோச் உட்பட, முன்பதிவு செய்பவர்கள் ஐஆர்சிடிசி மூலம் கேட்டரிங் வசதிகளைப் பெறலாம். அல்லது தற்போதுள்ள சுற்றுலா மற்றும் கேட்டரிங் இயக்குநரகத்தின் அறிவுறுத்தல்களின்படி பெட்டிகளை முன்பதிவு செய்யலாம்.
"பான்ட்ரி கோச்கள் உட்பட முழு கட்டண விகிதத்தில் ரயில்களை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே, தீப்பற்றாத சமையல் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். தீப்பற்றாத சமையல் வசதியுடன் கூடிய ஐசிஎஃப் பான்ட்ரி கோச் கிடைக்காத பட்சத்தில், வேறு ஏற்பாடுகளும் செய்து தரப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் 1989ஆம் ஆண்டின் 67,164, 165 சட்டப்பிரிவுகளின்படி, ரயில்களில் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், ஸ்டவ், வெடிபொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.