’’நம் வாழ்க்கையில் விபத்து எப்போது நேரும் என நமக்கு தெரியாது. ஆனால், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விபத்துகள் சிலருக்கு நேரும். அந்த விபத்தின் சுவடுகளிலேயே மங்கி நாம் மூலையில் அமர்ந்துகொள்ள போகிறோமா?  அல்லது அந்த வலியைக் கடந்து கனவுகளை நோக்கி பயணிக்கப் போகிறோமா என்பதை நாம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்’’ என்பதுதான் தனது 13 வயதில் இரு கைகளையும் ஒரு குண்டு வெடிப்பில் இழந்த கும்பகோணம் தமிழச்சி மாளவிகா ஐயரின் வாழ்க்கை தத்துவம். 

இப்போது அந்தத் தத்துவத்துவம் கொரோனாவோடு போராட்டும் உலகில் உள்ள ஓவ்வொரு ஜீவனுக்கும் பொருந்தும். அதற்கேற்றாற்போல அவரது இப்போதைய செயல்பாடுகளும் அமைந்திருக்கிறது. 

கும்பகோணத்தில் பிறந்தவர் மாள்விகா ஐயர். 1989ம் ஆண்டு பிறந்தவர். அவரது தந்தைக்கு ராஜஸ்தானில் வேலை. 2002ம் ஆண்டு ராஜஸ்தான் பிகனேர் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் தனது இரு கைகளையும் இழந்தார் மாள்விகா ஐயர். கால்களிலும் பேரிழப்பு. ரத்தமும், சதையுமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை சென்னைக்கு கொண்டு வைத்தியம் பார்த்தனர். 18 மாதங்கள் இடைவிடாத சிகிச்சை. ஆனால் அவருக்கு கைகள் மட்டும் இல்லாமல் போனது. 

மாளவிகா ஐயர் முடிவு செய்தார். அவருக்கு ஏற்பட்ட விபத்தின் தழும்புகளிலிருந்து வெளியேறி பள்ளிப்படிப்பு முடித்து பி.ஹெச்.டி முடித்து ஐநா மாநாடு ஒன்றில் இந்தியாவின் சார்பாக உரையாற்றிய பெருமை பெற்றிருக்கிறார் மாளவிகா. சிறந்த இந்திய குடிமகளுக்கான நரி சக்தி புரஷ்கார் விருதையும் ஜனாதிபதியிடம் பெற்றிருக்கிறார்.Malvika Iyer

வளர்ந்து வரும் உலக தலைவர்கள் எனும் விருதை நியூயார்க்கில் பெற்றார் மாளவிகா. இந்த விருதை பெறும் முதல் பெண் என்ற பெருமையும் மாளவிகாவையே சாரும். அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பெண்கள் தினத்தில், பிரதமரின் சமூகவலைதள கணக்குகளி நிர்வகிக்கும்  சாதனை பெண்மணிகள் 7 பேர் கொண்ட சிங்கப்பெண்மணிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் இந்த கும்பகோணம் தமிழச்சி மாள்விகா ஐயர்.


 மாளவிகா ஐயர் தன்னம்பிக்கை பேச்சாளராகவும், மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். அத்துடன் இவர் மாடலிங்கும் செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான் கொரோனாவிலிருந்து மக்களை காக்க ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார் மாளவிகா. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’உங்கள் பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும், உங்கள் வீடுகளை சுத்தப்படுத்தவும் நான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டிலேயே இருங்கள் மற்றும் சமூக தூரத்தை பராமரிக்கவும். நாம் ஒன்றாக இருப்போம்’’ எனப்பதிவிட்டு இரு கைகளையும் இழந்த நிலையில் கைகளை கழுவி கொரோனோவிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வோம் என்று உலக மக்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார் இந்த சிங்கத் தமிழச்சி.