முடி திருத்தும் கடையில் "லைப்ரேரி"..! டிவி பார்க்காமல் புத்தகம் படித்தால் 30% சலுகை..!    

சமுதாயத்தில் நாளுக்கு நாள் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேற்றம் கிடைத்தாலும், இன்றளவும் ஒரு சில விஷயங்களை நாம் பின்தங்கி தான் இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாகவே ஒரு கெடுதல் விளைவிக்கும் விஷயம் என்றால், மிக விரைவாக மக்கள் மத்தியில் பரவும். ஆனால் அதுவே ஒரு நல்ல விஷயம் என்றால் மக்களிடையே கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அந்த வகையில் தற்போது தூத்துடியில் முடிதிருத்தும் கடை உரிமையாளர் பொன் மாரியப்பன் மேற்கொண்ட சுவாரசிய விஷயம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

முடி திருத்தும் கடையில் "லைப்ரேரி"..!

அதாவது தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டிவி பார்ப்பதற்கு பதிலாக அந்த குறிப்பிட்ட நேரத்தை புத்தகம் படிப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய கடையில் சிறிய அளவிலான அழகிய நூலகம் ஒன்றை வைத்து உள்ளார்.இந்த நூலகத்தில் 1500 கும் அதிகமான புத்தகங்கள் உள்ளது.மேலும் முடி திருத்தம் செய்யும் போது அவர்கள் அந்த நேரத்தை படிப்பதற்காக பயன்படுத்தினால் கட்டணத்தில் 30 சதவீதம் குறைத்து ஆச்சரியமான ஓர் சலுகையும் வழங்குகிறார்.

இது குறித்த ஒரு போட்டோ மற்றும் விவரம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே மக்கள் என்ன நினைப்பார்கள்? இந்த சமுதாயத்தில் மாற்றம் வேண்டும்; அரசியலில் மாற்றம் வேண்டும்; மக்கள் மாற வேண்டும்; இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்கள் மாற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அவ்வாறு இல்லாமல் மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்... நாம் முதலில் நம்மிடம் மாற்றம் கொண்டு வந்து, அதை மற்றவர்களுக்கு கொண்டு செல்லலாம் என இந்த ஒரு நல்ல விஷயத்தை உடனடியாக செய்து அதனை நாலு பேருக்கு தெரியப்படுத்தினால் அதுவே மாபெரும் மாற்றமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த ஒரு புகைப்படம்.