பெண்களை விட ஆண்கள் தான் அதிக ரொமான்டிக்கானவர்கள் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதை பாலியல் உறவு தொடர்பான விஷயமாகவும் உளவியல் சார்ந்த விஷயமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் அதிக ரொமான்டிக்கானவர்கள் என சொல்லுவதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் நிச்சயம் ஆச்சரியமான ஆழமான உண்மைகளின் வெளிப்பாடாக இருக்கும்.

காதல் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு உணர்வு. காதல் உணர்வு என்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, பாதுகாப்பும், உறுதியும், ஆறுதலும் தரக்கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் படி, ஆண்கள் காதல் உறவை பெண்களை விட அதிகமாக சார்ந்து வாழ்வது தெரிய வந்துள்ளது. 

ஆண்கள் தான் அதிக அளவிலான ரொமான்டிக் உறவை நாடுகின்றனர். பெண்களை விட ஆண்கள் தான் இந்த உணர்வை அதிகமாக வெளிப்படுத்துகின்றனர். சாதாரண முத்தமிடுதல் தொடங்கி, உடல் ரீதியான உறவு வரை எல்லாவற்றிலுமே ஆண்களே முன்னெடுப்புகளை அதிகம் எடுக்கின்றனர்.

இதற்கு பல உளவியல், சமூக, கலாச்சார காரணங்கள் உள்ளன.. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1. ஆண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழிமுறைகள் :

பெண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் திறம்பட செயல்படுகிறார்கள். அவர்களுக்கு தாய், தோழி, சகோதரி போன்ற பல ஆதரவுகள் இருக்கும். அவர்கள் தங்களது மனப் புழுக்கத்தை, உணர்வுகளை காதலன் மட்டுமல்லாமல், கணவன் மட்டுமல்லாமல் நெருங்கிய தொழிகள், சகோதரிகள், அம்மா போன்றோருடன் அதிகமாக பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால், பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளும் பழக்கத்துடன் வளர்க்கப்படுகிறார்கள். நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களிடமோ கூட ஆண்கள் முழுமையாக மனஉணர்வுகளை பகிர்வதில்லை. காதலி மட்டும்தான் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய மிக நெருங்கிய உறவாக இருக்கிறார். இதனால்தான், காதல் உறவின் மீது அதிக நம்பிக்கை வைக்கிறார்கள் ஆண்கள்.

2. சமூக மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகள் : 

என்னதான் உலகம் முற்போக்காக மாறி விட்டாலும் கூட, இன்னும் பல சமுதாயங்களில் ஆண்கள் "வலிமைமிக்கவர்கள்" என கருதப்படுகிறார்கள். "ஆண் அழக்கூடாது", "ஆண்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது" போன்ற கருத்துகள் அவர்களை மனஉணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க வைத்து விடுகிறது.

ஆனால், காதல் உறவில், காதலியின் முன்னிலையில் அவர்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது. உண்மையில் அங்குதான் அவர்கள் இயல்பாக இருக்க முடிகிறது. அவர்களுக்கு அதுதான் ஒரு பெரிய ஆறுதல். காதல் உறவை அதிகமாக சார்ந்து வாழ்வதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. இதனால் தான் தனது காதல் துணையிடம் முழுமையாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள் ஆண்கள்.

3. தனிமையின் தாக்கம் :

ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் தனிமையை சற்று எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெண்களை விட அதிகமாக தனிமையை உணர்வார்கள்.

பெண்கள் குடும்ப உறவுகளிலும், தோழிகளுடனும் அதிகமாக இணைந்திருப்பார்கள். ஆனால், ஆண்கள் பெரும்பாலும் தங்களுக்குள் எல்லாவற்றையும் புதைத்துக் கொள்வார்கள். உறவுகள், தோழிகள் என பல ஆதரவுகளால் பெண்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். ஆனால், ஆண்களுக்கு காதலியே ஒரே நபராக ஆறுதலாக மாறுகிறாள். இவ்வாறு, மன அழுத்தம், தனிமை ஆகியவற்றை சமாளிக்கவும், காதல் உறவு அவர்களுக்கு மிக முக்கியமாகும்.

4. உறவுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தேடல்

ஆண்கள் பொதுவாக காதல் உறவை மட்டுமல்ல, திருமணத்தையும் மிக முக்கியமாகக் கருதுவார்கள். அவர்கள் உறவில் நீடித்த நம்பிக்கையை விரும்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் உறுதியான ஆதரவாக காதலியை பார்க்கிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கு காதலியின் ஆதரவு கிடைத்தால் போதும், என்ன பிரச்சனை இருந்தாலும் அதை சுலபமாக சமாளித்து விடுவார்கள். நெருக்கமான உறவு அவர்களுக்கு பாதுகாப்பான மனநிலையை தருகிறது.

5. உடல் மற்றும் மன நலனில் காதல் உறவின் தாக்கம்

காதல் உறவு இல்லாமல் ஆண்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இயல்பாக இருக்க முடிவதில்லை. அது இல்லாவிட்டால் உடல் மற்றும் மனநல பாதிப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் அதிகமாகும். உளவியல் ரீதியாக உறவின்மையால் விரக்தி ஏற்படும். ஆரோக்கியமான உணவு பழக்கம், தூக்க ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். திருமணமான அல்லது உறவில் இருக்கும் ஆண்கள் திருமணமாகாத ஆண்களை விட ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆண்கள் காதல் உறவை அதிகமாக சார்ந்து வாழ்வதற்கான முக்கிய காரணங்கள் சமூக கட்டுப்பாடுகள், தனிமை உணர்வு, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஆகியவையாகும். பெண்களுக்கு பல்வேறு வகையான ஆதரவு சூழல்கள் இருப்பதாலும் கூட அவர்களை விட ஆண்களே அதிக அளவிலான தேவைகளுக்கு உட்பட்டர்களாக இருக்கிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

காதலியின் முத்தம், அவளது அருகாமை, அவளது கொஞ்சல்கள், அவளது செல்லமான கட்டிப்பிடி, தலைகோதுதல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் ஆண் சொர்க்கத்தை உணர இதுவே காரணமாகும்.