எள்ளு சிறியதாய் இருந்தாலும், மிகப் பெரிய நன்மைகள் கொண்ட ஒரு அற்புத உணவு. இதை தினசரி உணவில் சேர்ப்பதால் இதய ஆரோக்கியம், செரிமான மேம்பாடு, சர்க்கரை கட்டுப்பாடு, தோல் பிரச்சினைகள் தீர்வு, நீண்ட ஆயுள் எனப் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். தினமும் ஒரு ஸ்பூன் அளவு எள் உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழர்களின் பாரம்பரிய உணவில் எள்ளுக்கு தனி இடம் உண்டு. ஆனால் காலப் போக்கில் எள் கலந்த உணவுகள் சாப்பிடுவது குறைந்து போய், தர்ப்பணம் போன்ற காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதால், அது கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் என்றாகி விட்டது. ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல நன்மைகளை வழங்கும் எள் தினசரி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அபரிமிதமான நன்மைகளை வழங்கும்.

எள்ளின் ஊட்டச்சத்து :

எள்ளு சிறிய விதையாக இருந்தாலும், இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து செறிவு, மினரல்கள் மற்றும் ஆரோக்கியப் பயன்கள் ஆச்சரியமூட்டக் கூடியவை ஆகும். இதில்,
* பொட்டாசியம் – இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
* கால்சியம், மெக்னீசியம் – எலும்புகளுக்கு வலிமை தரும்.
* தயாமின் (B1), நியாசின் (B3) – நரம்பியல் சுகாதாரத்திற்குத் தேவையானவை.
* நார் சத்து – செரிமானத்தை மேம்படுத்தும்.
* ஓமேகா 6 கொழுப்புச்சத்து – இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
போன்ற உடலுக்கு உறுதுணையாக இருக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

எள்ளு சாப்பிடுவதன் அதீத நன்மைகள் :

1. இதய ஆரோக்கியம் - எள்ளில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க உதவுகிறது. இது இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் துணை புரிகிறது.

2. எலும்புகளுக்கான சக்தி - எள்ளில் கால்சியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் தடிப்பை அதிகரித்து, வயதானவர்களில் எலும்பு உராய்வு (Osteoporosis) ஏற்படுவதை தடுக்கும்.

3. செரிமானத்தை அதிகரிக்கும் - நார் சத்து மிகுந்துள்ளதால், குடல் இயக்கத்தை சமப்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோம்பல் மற்றும் வாயுத் தொந்தரவுகளிலிருந்தும் விடுபட உதவும்.

4. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் - நீரிழிவு நோயாளிகளுக்கு எள்ளு மிகச் சிறந்த உணவு. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நார் சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்யும் திறன் கொண்டவை. இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

5. தோல் மற்றும் முடி நலன் - எள்ளில் உள்ள வைட்டமின் E, ஜிங்க், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் தோலின் இளமை தன்மையை பராமரிக்க, நரை முடியை தடுக்க, முடியின் நார்ச்சத்து அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. எள் எண்ணெய் மசாஜ் செய்தாலும், கோடையில் வெயில் பாதிப்பிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவுகிறது.

6. நீண்ட ஆயுளுக்குத் தூண்டுதல் - எள்ளில் உள்ள போஷாக்குகள், அன்டி-ஏஜிங் (Anti-aging) நன்மைகள் கொண்டவை. இது உடலுக்குள் வயதாகும் தன்மையை குறைத்து, நீண்ட ஆயுளுக்குத் துணை புரிகிறது.

எள்ளை உணவில் சேர்ப்பது எப்படி?

* எள்ளு தண்ணீர் – காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு தண்ணீர் குடிப்பது, உடல் நச்சுத்தன்மையை நீக்கி, செரிமானத்தை தூண்டும்.
* எள்ளு சாதம் – எள்ளை சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
* எள்ளுருண்டை – தினமும் 2-3 எள்ளுருண்டைகள் உண்பதால் உடல் ஆற்றலோடு இருக்கும்.
* எள் எண்ணெய் – இது தோலுக்கும், கூந்தலுக்கும் பெரும் நன்மை தரும்.