மீண்டும் அனுமதி கொடுத்தால் சபரிமலை கோவிலுக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வேன் என ஏற்கனவே கோவிலுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய கனகதுர்கா தெரிவித்துள்ளார். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் செல்ல காலம் காலமாக இருந்து வந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட். இருந்தபோதிலும் இதற்கு பக்தர்கள் மத்தியில் இன்றளவும் எதிர்ப்பு உள்ளது.

தடை நீக்கிய பின்னர் பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்து முயற்சி மேற்கொண்டு அதில் ஒரு சிலர் சபரிமலை சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். அவர்களுக்கு வலுவான கண்டன குரல் எழுந்தது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா பிந்து ஆகிய இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று வந்தனர். இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கனகதுர்கா" நான் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தது எனக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை... நான் எந்த கட்சியிலும் இல்லை... யாரும் என்னை இயக்கவில்லை... இந்த ஆண்டும் சபரிமலை கோவிலுக்கு செல்ல எனக்கு அனுமதி கொடுத்தால் சென்று வருவேன்" என தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் பெண்கள் சபரிமலை செல்வதற்கு தடையை நீக்கி இருந்தாலும் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யும் போது தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சலசலப்பு ஏற்படுகிறது மேலும் பாதுகாப்பு கருதி பல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை அனைத்தையும் மீறி மீண்டும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விருப்பம் என கனகதுர்கா தெரிவித்திருப்பது பக்தர்கள் மத்தியில் மேலும் ஒரு விதமான எரிச்சலை உண்டு செய்துள்ளது.