உங்களுக்கு சர்க்கரை இல்லை என்று ரேஷன் கடையில் சொன்னால், சண்டைக்கு செல்லும் மக்கள், அதே வார்த்தையை மருத்துவர் சொல்லிவிட்டால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். காரணம், சர்க்கரை நோய் அவ்வளவு பிரச்சனையை தரக்கூடியது என்பதுதான். 

ஒருமுறை வந்துவிட்டால், காலத்துக்கும் சர்க்கரைநோய் நம்மைவிட்டு அகலாது என்ற கருத்துதான். உண்மையில் சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாயை கட்ட வேண்டும். கையை கட்ட வேண்டும். உணவு பதார்த்தங்களை பார்த்தவுடன், வாயோ, கையோ நீண்டுவிட்டால், பிரச்சனை இன்னும் அதிகமாகும். அதைவிட கொடுமையானது, போகிறவர், வருவோர் எல்லாம் ஆலோசனை என்ற பெயரில் நம்மை பயமுறுத்துவதுதான். உண்மையில் சர்க்கரை நோயாளிகள் எதையெல்லாம் சாப்பிடலாம் என பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடிய பழங்கள் :

ஆப்பிள் : நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோருக்கு டைப்2 சர்க்கரை நோயின் தாக்கும் அபாயம் குறைவாக இருப்பது, ஹார்வர்ட் பள்ளியின் பொது சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே, ஆப்பிள் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அவகேடோ : அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இந்த வளமான நல்ல கொழுப்புக்கள், டைப்2 சர்க்கரை நோயின் அபாயத்தை 25% குறைப்பது ஆய்வில் தெரியவந்தது. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு அவகேடோ அருமருந்து.

ப்ளூபெர்ரி : இந்த பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், அவை சர்க்கரை நோயின் அபாயத்தை குறைப்பதோடு, அறிவாற்றல் திறன் பாதிக்கப்படுவதையும் குறைக்கிறது. மேலும், ப்ளூபெர்ரியில் உள்ள அந்தோசையனின்கள் டைப்2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

கிரான்பெர்ரி : சிறுநீரக பாதை தொற்றுக்களில் இருந்து விடுவிக்க பெரிதும் உதவியாக இருக்கும் கிரான்பெர்ரி, சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகச்சிறந்த மருந்து. இதில் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளான அந்தோசையனின்கள் இருப்பதால், இவற்றையும் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.

தர்பூசணி, முலாம் பழம் : இவற்றில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை உள்ளன. நீர்ச்சத்தும் அதிக அளவில் இருப்பதால், சாலட்டாக சாப்பிட்டால், சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, சர்க்கரை நோயின் தீவிரமும் தடுக்கப்படும்.

ராஸ்ப்பெர்ரி : இதில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பழமாகும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.