கொரோனாவை விரட்டுவது எளிது.! கொரோனாவில் இருந்து தான் எப்படி மீண்டேன் என விளக்குகிறார் சீனியர் டாக்டர் கிளார்!
பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா.அவர் கொரோனாவில் இருந்து எப்படியெல்லாம் மீண்டார் என்று தன்னுடைய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
T.Balamurukan
பாராசிடமால், கோழி சூப், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டே கரோனா வைரஸை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த டாக்டரான கிளார் ஜெராடா.அவர் கொரோனாவில் இருந்து எப்படியெல்லாம் மீண்டார் என்று தன்னுடைய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர்.நியு யார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற கிளார், லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.வைரஸ் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார்.
கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் மற்றும் சளியால் மார்பு வலி எல்லாமும் கிளாருக்கு இருந்தது. டாக்டர் கிளார் ஜெராடா தற்போது நோய்த் தாக்குதலிலிருந்து மீண்டுவிட்டார். முதியவர்களாக இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட பெரும்பாலானவர்களால் நிச்சயமாக நலம் பெற முடியும் என்று உறுதிபடத் சொல்லுகிறார் கிளார்."நான் முற்றிலுமாக சத்தை இழந்துவிட்டேன். என் முன்னால் தரையில் கிடக்கும் 50 பவுண்ட் தாளைக்கூட குனிந்து என்னால் எடுக்க முடியாத அளவில் என்னுடைய உடல்நிலை இருந்தது.நோயின் பாதிப்பு என்னை அப்படியே அடித்துப் போட்டுவிட்டது, ஆனால், நான் ஒருபோதும் என் உயிருக்கு ஆபத்து, பிழைக்க முடியாது என்று நினைக்கவேயில்லை.நோய்த் தொற்றுக்கு எதிராக எந்த அளவுக்குப் போராட முடியுமோ அந்த அளவுக்கு என்னுடைய உடல் போராடியது.
"ஏன்.. மக்கள் இந்த அளவுக்குக் கவலைப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பெரும்பாலானவர்கள் என்னைப் போல நிச்சயம் நலம் பெற்றுவிட முடியும். இதுவொன்றும் விதிக்கப்பட்ட மரண தண்டனை அல்ல."தன்னுடைய கணவரான ராயல் மனநல மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவரான சர் சைமன் வெஸ்லி, கால்பந்தாட்டத்தின்போது சுற்றிக்கொள்ளும் துணி மூலம் முகத்தைச் சுற்றித் தன்னைக் காத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் கிளார்.நியுயார்க்கிலிருந்து திரும்பிவந்தபோது கருத்தரங்க மலரையும், சின்னதாக காந்தத்திலான சுதந்திர தேவியின் சிலையை மட்டும்தான் கொண்டுவந்ததாக நினைத்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அவற்றைவிட மிக அதிகமாக எடுத்து வந்திருக்கிறேன்" .
"எப்படியோ என்னைத் தொற்றிக்கொண்ட கொரோனா வைரஸ், பிரிட்டனுக்கு வந்த பிறகு தன்னுடைய வேலைகளைக் காட்டத் தொடங்கியது. விமானப் பயண நேரத் தளர்ச்சி, சோர்வு, தலைவலி போன்றவற்றுடன் கொரோனாவும் கலந்துகொண்டுவிட்டது.வறண்ட இருமலும் விமானத்தில் நீண்ட தொலைவு பயணத்தில் சுவாசித்த காற்றும்தான் காரணம் என நினைத்தேன். ஆனால், காய்ச்சல் மட்டும் 102 டிகிரி பாரன்ஹீட் இருந்ததை என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.அடுத்த ஐந்து நாள்களுக்கு, டாய்லெட் செல்லும் நேரம் தவிர, முழுவதும் படுத்த படுக்கையாகவே இருந்தேன்.இந்த காலகட்டத்துக்குப் பிறகு அந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன. சோர்வும், நாக்கில் சுவைக் குறைவும் இருந்தது.மோசமான உடல்நிலையுடன்தான் இருந்தேன். ஆனால் ஒருபோதும் இதனால் இறந்துவிடுவேன் என்று நினைக்கவே இல்லை.கொரோனாவிலிருந்து நலம் பெற எனக்கொன்றும் பிரமாதமான மருந்துகள் எல்லாம் எதுவும் தேவைப்படவில்லை.ஒரு நாளில் மூன்று வேளைகளுக்கு இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவைதான் எனக்குத் தேவைப்பட்டன.
"எனக்கு மீண்டும் பசி எடுக்கச் செய்வதில் கடவுள் இயற்கையாகத் தந்த பெனிசிலினான கோழி சூப் பெரும் பங்காற்றியது.என்னுடைய கணவர் என்னைவிட்டுத் தள்ளியே இருந்துகொண்டார். செல்போன் மூலம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். ஒரே பாதுகாப்பு ஏற்பாடாக முகத்தைச் சுற்றிக் கால்பந்துத் துணியை அவர் கட்டிக்கொண்டார்.இதுவரை தான் அனுபவித்த நோய்களிலேயே இதுதான் மோசம் என்று குறிப்பிட்ட கிளார், இதை மகப்பேற்றுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம், ஆனால் அது நோயல்ல.கொரோனா பாதிப்பு அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தால் அல்ல; அதனுடைய வலி காரணமாகத்தான். என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் கிளார்.