ஷாக்.. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் நகம்.. ஒப்பந்ததாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த IRCTC

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உணவில் நகம் இருந்த நிலையில், அந்த உணவை வழங்கிய கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ஐஆர்சிடிசி அபராதம் விதித்துள்ளது

IRCTC fined contractor Rs 25,000 after nail found on food served on Vande Bharat train

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகமானதில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரயில்கள் மீது கல் வீச்சு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. இந்த சூழலில் வந்தே பாரதத்தில் வழங்கப்படும் உணவின் தரமும் மோசமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

ரயில் மற்றும் விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்து பயணிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகார் கூறுகின்றனர். மேலும் தரமற்ற உணவு விநியோகம் குறித்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். அந்த வகையில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தொடர்பாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்

மும்பை-கோவா ரயில் பயணத்தின் போது பயணி ஒருவரின் உணவில் நகம் கண்டுபிடிக்கப்பட்டது. உணவுப் பொட்டலத்தில் நகம் இருந்ததைக் கண்டு கருத்து தெரிவித்த பயணி மசீந்திர பவார், 'ஐஆர்சிடிசி சேவைகள் மேம்படும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) உணவின் தரம் குறைந்ததற்தாக அந்த கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு  ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.

கேட்டரிங் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் தவிர, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சில நெறிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன என்று ஐஆர்சிடிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிர்வாக நிலை அதிகாரி ஒருவர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சேவைகளை மேற்பார்வையிடுவதற்காக பயணிப்பார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ ரயில்களில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலையை எழுப்பி உள்ளது.. கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் சோதனைகள் எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios